தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை நெருங்கி வருகிறோம்: ஹமாஸ் தலைவர்

4 mins read
dad8c93d-c8ab-4e80-9609-d293e35eb2d6
நவம்பர் 20ஆம் தேதி டெல் அவிவில் உள்ள யுனிசெஃப் அலுவலகத்துக்கு முன்பு கூடிய உறவினர்கள் பிணைப்பிடித்துச் செல்லப்பட்டவர்களின் புகைப்படங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

காஸா: இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் நெருங்கிவிட்டது என்று ஹமாஸின் தலைவர் ராய்ட்டர்சிடம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் புதிய திருப்பமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் சில தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் குறித்து இஸ்ரேல் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

தங்களுடைய ஹமாஸ் அதிகாரிகள் இஸ்ரேலுடன், ஒரு போர் நிறுத்த உடன்பாட்டை எட்ட முயற்சி செய்து வருகின்றனர் என்றும் கத்தார் அதிகாரிகளிடம் தங்களுடைய பதிலை தெரிவித்துவிட்டதாகவும் ஹமாஸின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் உதவியாளர் ராய்ட்டர்ஸுக்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தத்தின் விதிமுறைகள் பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

போர் நிறுத்தத்தை எவ்வளவு காலத்திற்கு நீட்டிப்பது, காஸாவுக்குள் நிவாரணப் பொருள்கள் எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள், ஹமாஸ் பிடித்து வைத்துள்ள பிணைக்கைதிகள், இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீன கைதிகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு பேச்சு நடப்பதாக ஹமாஸ் அதிகாரி ஒருவர் அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

இரு தரப்பிலும் பெண்களும் குழந்தைகளும் முதலில் விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. இது பற்றிய விவரங்களை கத்தார் பின்னர் அறிவிக்கும் என்று ஹமாஸ் அதிகாரியான இஸ்ஸாட் எல் ரெஷிக் தெரிவித்தார்.

இஸ்ரேல், ஹமாசுக்கு இடையே கத்தார் சமரசப் பேச்சை நடத்தி வருகிறது.

காஸா வட்டாரத்தில் சிக்கியிருக்கும் சில பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ்-இஸ்ரேல் இடையே விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என்று அமெரிக்காவும் கூறியுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் நவம்பர் 20ஆம் தேதி இது குறித்து நம்பிக்கை தெரிவித்தார்.

பாலஸ்தீனத்தின் ஆயுதம் ஏந்திய போராளிகளான ஹமாஸ், அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை நடத்தி, சுமார் 240 பேரை பிணைப் பிடித்துச் சென்றது. அந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்தனர்.

இதற்கிடையே பல முஸ்லிம் நாடுகளின் மூத்த அதிகாரிகளுடன் அமைக்கப்பட்ட புதிய குழு ஒன்று, காஸாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்துவதற்காக ஐநா பாதுகாப்பு மன்றத்தின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களையும் மற்றவர்களையும் சந்திக்கவிருக்கிறது என்று துருக்கிய வெளியுறவு அமைச்சின் வட்டாரம் செவ்வாயன்று தெரிவித்தது.

முன்னதாக ரியாத்தில் நடைபெற்ற அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு (ஓஐசி) உச்ச மாநாட்டில் புதிய குழு அமைக்கப்பட்டது.

இதில் துருக்கி, கத்தார், எகிப்து, ஜோர்டான், நைஜிரியா, சவூதி அரேபியா, இந்தோனீசியா, பாலஸ்தீனம் ஆகியவற்றின் வெளியுறவு அமைச்சர்களும் பிரிநிதியாளர்களும் ஓஐசியின் தலைமைச் செயலாளரும் இடம்பெற்றுள்ளனர்.

ஐநா பாதுகாப்பு மன்ற நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் அரபு நாடுகளின் குழு பேச்சை தொடங்கியுள்ளதாகவும் அதன் ஒரு பகுதியாக திங்கட்கிழமை பெய்ஜிங் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பிரச்சினை தொடர்பில் மனிதாபிமான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்ல அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் (ஐசிஆர்சி) தலைவர் திருவாட்டி மிர்ஜானா ஸ்போல்ஜாரிக் நவம்பர் 20ஆம் தேதி அன்று ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவைச் சந்தித்துப் பேசினார்.

அதுமட்டுமல்லாமல் கத்தார் அதிகாரிகளையும் அவர் சந்தித்ததாக ஐசிஆர்சி அறிக்கை தெரிவித்தது.

ஆனால் பிணைக் கைதிகள் தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று அந்த அமைப்பு குறிப்பிட்டது.

இரு தரப்பும் ஒப்புக் கொண்டால் மட்டுமே எதிர்காலத்தில் பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயாராக இருப்பதாக ஐசிஆர்சி கூறியது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தொடங்கியதிலிருந்து பிணைக் கைதிகளை பாதுகாப்பாக விடுவிப்பதற்கான பேச்சு நடைபெற்று வருகிறது.

ஆனால் இதுவரை அது கைகூடவில்லை.

மூன்று நாள் போரை நிறுத்தினால் அதற்குப் பதிலாக ஐம்பது பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ்-இஸ்ரேல் இடையே ஏற்பாடு ஒன்றை செய்ய கத்தார் சமரசப் பேச்சாளர்கள் கடந்த வாரம் முயற்சி செய்தனர். அந்த மூன்று நாள் இடைவெளியில் காஸா மக்களுக்கு அவசரகால உதவிகளை வழங்க திட்டமிடப்பட்டிருந்ததாக ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டது.

அமெரிக்காவுக்கான இஸ்ரேலியத் தூதர் மைக்கல் ஹெர்சோக் ஏபிசியிடம் பேசியபோது இவ்வாரம் அல்லது வரப்போகும் நாள்களில் ஒப்பந்தம் ஏற்பட்டுவிடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

கத்தார் பிரதமர் ஷேக் முஹமட், பிணைக்கைதிகளை விடுவிக்கும் விவகாரத்தில் சில சாதாரண பிரச்சினைகள் மட்டுமே தீர்க்க வேண்டியுள்ளதாகக் கூறினார்.

இஸ்ரேல் ஒப்பந்தம் குறித்து எந்தவிதத் தகவலும் வெளியிடவில்லை

இதற்கிடையே பிணைக்கைதிகளின் சில உறவினர்கள், பிடிபடும் பாலஸ்தீனிய போராளிகளுக்கு உத்தேச மரண தண்டனை விதிப்பது குறித்துப் பேச வேண்டாம் என்று நவம்பர் 20 அன்று வலியுறுத்தினர். அவ்வாறு பேசுவதுகூட பிணைக் கைதிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று அவர்கள் எச்சரித்தனர்.

அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் தாக்கியதால் அந்தக் குழுவை குறிவைத்து காஸா வட்டாரத்துக்குள் இஸ்ரேல் நுழைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்