காஸா: இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே புதிய உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
அதன்படி முதற்கட்டமாக ஐம்பது பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும். அதற்கு ஈடாக நான்கு நாட்கள் சண்டை நிறுத்தம் அமலுக்கு வரும்.
இதற்கு இஸ்ரேல் அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஐம்பது பிணைக்கைதிகள் விடுவிப்பதற்கு ஈடாக நான்கு நாள்கள் சண்டை நிறுத்தப்படும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
சமரசப் பேச்சை நடத்திய கத்தார் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல், ஹமாஸ் ஆகியன பல நாள் சண்டை நிறுத்தம் தற்போதைய சூழ்நிலையில் மிகவும் அவசியம் என்று வலியுறுத்தியுள்ளன.
பாலஸ்தீன போராளிகளின் அமைப்பான ஹமாஸ், 200க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகளை பிடித்து வைத்திருப்பதாக நம்பப்படுகிறது. கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது அது திடீர் தாக்குதலை நடத்தியபோது பிணைக் கைதிகளைப் பிடித்துச் சென்றது.
இந்தத் தாக்குதலில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து இஸ்ரேல் தொடர்ந்து காஸாவைத் தாக்கியதில் பாலஸ்தீனர்களின் தரப்பில் 12,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஹமாஸ் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
‘நான்கு நாள்களில் ஐம்பது பெண்கள், குழந்தைகள் விடுவிக்கப்படுவார்கள்,” என்று இஸ்ரேலியப் பிரதமரின் அறிக்கை குறிப்பிட்டது. அந்த நான்கு நாள்களிலும் சண்டை நிறுத்தப்படும்.
தொடர்புடைய செய்திகள்
அடுத்த ஒவ்வொரு பத்து பிணைக் கைதிகளின் விடுவிப்பிற்கும், கூடுதலாக ஒவ்வொரு நாள் சண்டை நிறுத்தப்படும் என்று அறிக்கை சொன்னது.
இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பது குறித்து அறிக்கை எதுவும் குறிப்பிடவில்லை.
ஆனால் சமரசப் பேச்சு குறித்து விவரித்த அமெரிக்க அதிகாரி ஒருவர், ஒப்பந்தத்தில் 150 பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பதும் உள்ளடங்கியிருக்கிறது என்றார்.
“ஹமாஸ் விடுவிக்கும் பிணைக்கைதிகள் வீடு திரும்ப இஸ்ரேலிய அரசாங்கம் கடப்பாடு தெரிவித்துள்ளது. உத்தேச உடன்பாட்டை இஸ்ரேல் அங்கீகரித்துள்ளது,” என்று ஊடகங்களுக்கு அனுமதியில்லாத பல மணி நேரப் பேச்சுக்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்தது.
பிணைக்கைதிகள் உடன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்தாலும் எல்லையில் தனது ராணுவத்தின் போர் ஆயத்த நிலையில் எந்தவித மாற்றமும் இருக்காது என்று முன்னதாக இஸ்ரேலியப் பிரதமர் கூறினார்.
“நாங்கள் போரைத் தொடுத்துள்ளோம். எங்கள் இலக்கு நிறைவேறும் வரை போர் தொடரும். ஹமாசை அழிப்பது, பிணைக் கைதிகளை விடுவிப்பது, காஸாவில் உள்ள யாரும் இஸ்ரேலுக்கு மிரட்டலாக இல்லாமல் செய்வது,” என்று பதிவு செய்யப்பட்ட தகவலில் நெட்டன்யாகு தெரிவித்திருந்தார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிலைமை மேம்பட உதவியதாகவும் அவர் கூறினார்.