ஜோகூர் பாரு: மலேசியாவின் அடுத்த மாமன்னராக ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர் அடுத்த ஆண்டு பதவி ஏற்க இருக்கிறார்.
மாமன்னர் என்கிற முறையில் 33 மில்லியன் மலேசியர்களின் நலனுக்குத் தாம் முன்னுரிமை கொடுக்கப்போவதாக அவர் புதன்கிழமையன்று தெரிவித்தார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 222 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மட்டுமே தமது கவனம் இருக்காது என்றார் அவர்.
இதை அவர் ஜோகூரில் உள்ள அவரது அரண்மனையில் நடைபெற்ற தமது 65வது பிறந்தநாள் விழாவின்போது கூறினார்
மாமன்னராக நியமிக்கப்படுவது பதவி உயர்வு அல்ல என்று குறிப்பிட்ட சுல்தான் இப்ராகிம், அது பல தியாகங்களைச் செய்ய வேண்டிய கூடுதல் பொறுப்பு எனக் கூறினார்.
மலேசிய அரசியல் தலைவர்கள் பிளவுப்பட்டுக் கிடப்பதாக அவர் அதிருப்தி தெரிவித்தார். பதவிக்காகவும் சுயலாபத்துக்காகவும் அவர்கள் செயல்படுவதாகவும் அதன் விளைவாக மக்களிடையே ஒற்றுமை இல்லாமல் போவதாகவும் அவர் அக்கறை தெரிவித்தார்.
தலைவர்கள் சகிப்புத்தன்மையுடனும் இருக்க வேண்டும் என்றும் மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் என்றும் சுல்தான் இப்ராகிம் கேட்டுக்கொண்டார்.
அப்போதுதான் நாட்டு மக்கள் செழிப்புடனும் நலமாகவும் இருப்பர் என்றார் அவர்.