மழை, குளிரில் இடம்பெயர்ந்த காஸா மக்கள் அவதி

மழை, குளிரில் இடம்பெயர்ந்த காஸா மக்கள் அவதி

2 mins read
dba264d8-0174-44fb-814e-c067231aca85
இந்தப் படம் காஸா எல்லைக்கு அருகே உள்ள தெற்கு இஸ்ரேலில் நவம்பர் 22ஆம் தேதி எடுக்கப்பட்டது. வடக்கு காஸா மீது இஸ்ரேலியப் படை குண்டுகளை வீசி தாக்கியதால் அவ்வட்டாரம் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. - பாடம்: ஏஎஃப்பி

ராஃபா: இஸ்ரேல் தாக்குதலிலிருந்து தப்புவதற்காக அக்டோபர் முற்பகுதியில் வடக்கு காஸாவில் உள்ள வீட்டிருந்து திருமதி கூலுட் ஜர்போயும் அவரது குழந்தைகளும் வெளியேறி மாற்று இடத்துக்குச் சென்றனர்.

அப்போது கோடைகாலமாக இருந்ததால் அவர்கள் ஒரு வழியாக சமாளித்தனர். ஆனால் மழையும் குளிருமாக இருப்பதால் தற்போது போர்வை இல்லாமல் தவிக்கின்றனர்.

“ஒரு மாதத்திற்கு முன்பு இருபது உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்துடன் காஸா நகரத்தைவிட்டு வெளியேறினோம்,” என்று 29 வயது பெண் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

ராஃபாவில் ஐநாவின் பாலஸ்தீனர்களுக்கான உதவி அமைப்பு நடத்தும் பழைய துணிக் கடையில் அவர் போர்வையைத் தேடிக் கொண்டிருந்தார்.

ஜர்போயும் அவரது குடும்பத்தினரும் பள்ளியில் தரையில் படுத்து உறங்குகின்றனர்.

“நாங்கள் எந்தத் துணியையும் எடுத்து வரவில்லை. குளிர்கால உடையை வாங்கியாக வேண்டும்,” என்று அவர் சொன்னார்.

போருக்கு முன்பும் காஸாவில் மக்கள் வாழ்க்கை சிரமமாக இருந்தது.

இஸ்ரேல் 2007ஆம் ஆண்டிலிருந்து அப்பகுதிக்கு எதிராக மேற்கொண்ட முற்றுகை காசா பொருளியலை அடிமட்டத்துக்குச் சரிய செய்தது.

“எண்பது விழுக்காடு காஸா மக்கள் அனைத்துலக உதவியை நம்பியிருப்பதால் அந்த இயக்கத்தின் மீதான கட்டுப்பாடுகள் சுகாதாரம் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளைப் பெறுவதற்குத் தடையாக இருந்தன,” என்று ஐநாவின் ‘UNCTAD’ அமைப்பு குறிப்பிட்டது.

காசாவில் இன்று 2.4 மில்லியன் மக்கள் பட்டினியில் இருப்பதாகவும் 1.65 மில்லியன் மக்கள் போரினால் இடம்பெயர்ந்துள்ளதாகவும் கிட்டத்தட்ட பாதி வீடுகள் அழிக்கப்பட்டதால் அல்லது சேதமடைந்ததால் வறுமை மேலும் மோசமாகும் என்றும் ஐநா கூறியுள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேலுடன் ஏற்பட்டுள்ள நான்கு நாள் ஒப்பந்தம், காஸாவில் உள்ள பிணைக்கைதிகளை விடுவிக்கவும் இஸ்ரேலிய சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை விடுவிக்கவும் வழி பிறந்துள்ளது என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

முற்றுகையிடப்பட்டுள்ள காஸாவிற்கு நிவாரணப் பொருள்களும் எரிபொருளும் அனுப்பப்படும் என்றும் அது கூறியது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் செவ்வாய்க்கிழமை அன்று பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான உடன்பாட்டை வரவேற்றார்.

“இன்றைய உடன்பாடு கூடுதலான அமெரிக்க பிணைக் கைதிகள் வீடு திரும்ப உதவும். அனைவரும் விடுவிக்கப்படும் வரை ஓய மாட்டோம்,” என்று அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்