கோலாலம்பூர்: மலேசியா முழுவதும் உள்ள தனியார், அரசாங்கப் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பில் காவல்துறை 37 புகார்களைப் பெற்றுள்ளதாக தேசிய காவல்துறைப் படைத்தலைவர் ரஸாருதீன் ஹுசைன் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
வெடிகுண்டு மிரட்டல்களைத் தொடர்ந்து, காவல்துறையினர் மாணவர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றினர். சம்பந்தப்பட்ட பள்ளிகளை முழுமையாகச் சோதனையிட்டதில், வெடிகுண்டு இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படாததால் அது பொய்யான மிரட்டல் என தெரியவந்தது என்றார் அவர்.
ஜெர்மன் மொழியில் ‘அமைதியைச் சீர்குலைப்பவர்‘ எனும் பொருள் கொண்ட ‘டாக்ஸ்டோர்’ எனும் கணக்கிலிருந்து அந்த மின்னஞ்சல்கள் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அனுப்பியவர் பயன்படுத்திய இரு மின்னஞ்சல் முகவரிகள் புதிதாக உருவாக்கப்பட்டவை என்றும் வேறு எந்த இணைய சேவைகளுக்கும் பயன்படுத்தப்படவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதே மின்னஞ்சல் சேவை வழங்குநரைப் பயன்படுத்தி நவம்பர் 12 ஆம் தேதி ஜமைக்காவில் உள்ள 70 பள்ளிகளுக்கும் இதே உள்ளடக்கம் கொண்ட மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாக அவர் கூறினார். மலேசியாவில் நடந்த சம்பவத்துக்கும் ஜமைக்காவில் நடந்த சம்பவத்துக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுவதாக ரஸாருதீன் கூறினார்.