கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்குள், பொருளியல் குறித்த கவலைகள் மக்கள் மனதில் ஆதிக்கம் செலுத்துவதால், அவருக்கு ஆதரவு குறைந்துள்ளது.
மெர்டேகா ஆய்வு மையத்தின் அண்மைய கருத்துக்கணிப்பு, அன்வார், ஒற்றுமை அரசாங்கத்தின் மீதான ஆதரவு குறைந்து வருவதைக் காட்டியது.
கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பரில் கிட்டத்தட்ட 68 விழுக்காடாக இருந்த ஆதரவு 50 விழுக்காடாகக் குறைந்துள்ளது. அக்டோபர் 4 முதல் அக்டோபர் 24 வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அரசாங்கம் பொருளியலைக் கையாள்வதில் உள்ள அதிருப்திநிலை 19 விழுக்காட்டிலிருந்து 43 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
கடந்த டிசம்பரில் 54 விழுக்காடாக இருந்த அரசாங்கத்தின் மீதான ஆதரவு தற்போது 41 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
78 விழுக்காட்டினர் பொருளியல் கவலைகளை தாங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினையாகக் குறிப்பிட்டுள்ளனர்.
31 விழுக்காட்டினர் மட்டுமே நாடு சரியான திசையில் செல்வதாகக் கருதுகின்றனர். கிட்டத்தட்ட 60 விழுக்காட்டினர் நாடு தவறான திசையில் செல்வதாக கூறுகின்றனர்.
நாடு தவறான திசையில் செல்கிறது என்று நினைப்பவர்களுக்கு முக்கியக் காரணங்களாக பொருளியல் பிரச்சினைகள் (56%), அரசியல் நிலைத்தன்மை (13%), மோசமான நிர்வாகம் (9%) ஆகியவை உள்ளன.

