ஊழல் வழக்கில் சந்தேகிக்கப்படும் இந்தோனீசிய ஊழல் ஒழிப்புப் பிரிவின் தலைவர்

ஊழல் வழக்கில் சந்தேகிக்கப்படும் இந்தோனீசிய ஊழல் ஒழிப்புப் பிரிவின் தலைவர்

2 mins read
5c1783c2-197c-4484-ade0-f5ab9cd546c5
இந்தோனீசிய ஊழல் ஒழிப்புப் பிரிவின் தலைவர் ஃபிர்லி பஹுரி. - படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: இந்தோனீசியக் காவல்துறை, நாட்டின் ஊழல் ஒழிப்புப் பிரிவுத் தலைவர் ஃபிர்லி பஹுரி கையூட்டு பெற்றதாகச் சந்தேகிக்கிறது.

காவல்துறையின் முன்னாள் தலைமை அதிகாரியான அவர், இந்தோனீசியாவின் முன்னாள் வேளாண் துறை அமைச்சர் சியாருல் யாசின் லிம்போவை மிரட்டிப் பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது.

சென்ற அக்டோபர் மாதம், ஊழல் வழக்கில் சந்தேகிக்கப்படுவதாக அந்த முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டார். திரு ஃபிர்லி அவரை மிரட்டிப் பணம் பறித்ததாக சந்தேகிக்கப்படுவதற்குப் போதிய ஆதாரம் இருப்பதாக இந்தோனீசியக் காவல்துறை தெரிவித்துள்ளது.

வேளாண் அமைச்சில் 2020 முதல் 2023ஆம் ஆண்டு வரை அரசாங்க அதிகாரி ஒருவர் மிரட்டிப் பணம் பறித்ததாக ஜகார்த்தா காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

பணப் பரிமாற்றத்துக்கான ஆவணங்களை சிங்கப்பூரிலிருந்து அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும் இரண்டு இடங்களில் நடந்த சோதனையில் 7.4 பில்லியன் ரூப்பியா ($636,000) கைப்பற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திரு ஃபிர்லி கைது செய்யப்படவில்லை. ஊழல் வழக்கில் சந்தேகிக்கப்படுவது குறித்து அவரோ இந்தோனீசிய ஊழல் ஒழிப்புப் பிரிவோ கருத்துரைக்கவில்லை.

இதன் தொடர்பில் சட்டத்தை மதித்து நடந்துகொள்ளவிருப்பதாக இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ கூறினார்.

திரு ஃபிர்லி, இந்தோனீசிய ஊழல் ஒழிப்புப் பிரிவின் தலைவராக 2019ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதேநேரத்தில், அந்தப் பிரிவை நிர்வகிக்கும் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதால் ஊழல் ஒழிப்புப் பிரிவு வலுவிழந்து விட்டதாகக் கூறி அதை மீட்டெடுக்கும் கோரிக்கையுடன் தொடர்ந்து பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

2002ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்தப் பிரிவு, நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள், அதிகாரிகள், வர்த்தகர்கள்மீது நடவடிக்கை எடுத்ததல் இந்தோனீசியாவின் ஆக உயரிய மரியாதைக்குரிய அமைப்பாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்