தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பலதார மணம் குறித்து மலேசிய எம்.பியின் சர்ச்சைப் பேச்சு

2 mins read
b6ee42cb-5dd7-41ba-9d55-cb66bfbbaaaa
மலேசியாவில் குபாங் கெரியான் நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராகிம் துவான் மான் நாட்டில் பலதார மணம் இன்னமும் சர்ச்சைக்குரிய விவகாரமாகவே உள்ளதாக தெரிவித்தார். - படம்: இப்ராகிம் துவான் மான் ஃபேஸ்புக்

பெட்டாலிங் ஜெயா: பலதார மணம் குறித்து மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சபையில் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மலேசிய முஸ்லிம் மாதர்கள் காலங்கடந்து திருமணம் புரிந்துகொள்ளும் போக்கை தீர்க்க ஒருவழி முஸ்லிம் ஆடவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை திருமணம் புரிந்துகொள்வதில் இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

மலேசியாவின் பாஸ் எனப்படும் இஸ்லாமிய கட்சியின் துணைத் தலைவராகவும் உள்ள இப்ராகிம் துவான் மான் நாட்டின் குபாங் கெரியான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர். இவர், நாட்டில் பலரிடம் இன்னமும் பலதார மணம் வெளிப்படையாக பேச முடியாத சர்ச்சைக்குரிய விவகாரமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

“ஏதோ ஒரு குற்றம் புரிந்ததுபோல் நாங்கள் பார்க்கப்படுகிறோம். ஓர் ஆடவர் தகுதி, தேர்ச்சியும் பெற்று அவர் நியாயமாக நடந்துகொள்பவராக இருந்தால், அவருக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும்,” என்று மாதர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு நவம்பர் 22ஆம் தேதி பேசினார்.

மலேசியாவில் 8.4 மில்லியனுக்கும் மேலான மாதர் திருமணம் ஆகாமல் இருப்பதாக அவர் கூறினார். ஆனால், இந்தத் தகவலை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் தாம் கூறுவதாக அவர் தெளிவுபடுத்தவில்லை.

“இது இறுதித் தீர்வல்ல என்பது எனக்குத் தெரியும். ஆனால், இதன்மூலம் காலங்கடந்த திருமணப் பிரச்சினையை நாம் எதிர்கொள்ளலாம். இதில் எதிர்த்தரப்பில் உள்ள சிலர் நிச்சயம் எனக்கு ஆதரவளிப்பர் என நான் நம்புகிறேன்.

“பிரச்சினைக்குத் தீர்வுகளை நாம் தேடுகிறோம்,” என்று மன்றத்தில் சிரிப்பொலிக்கு இடையே, அரசுத் தரப்பை நோக்கி அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்