எம்டிஐஎஸ்: இந்தோனீசிய துணை அதிபர் வேட்பாளர் தமது கல்வித் தகுதி குறித்துப் பொய்யுரைக்கவில்லை

எம்டிஐஎஸ்: இந்தோனீசிய துணை அதிபர் வேட்பாளர் தமது கல்வித் தகுதி குறித்துப் பொய்யுரைக்கவில்லை

2 mins read
e29c7723-682f-4df7-a839-c3d0577fb0ab
அதிபர் வேட்பாளர் பிரபோவோ சுபியாந்தோ (இடது), துணை அதிபர் வேட்பாளரும் அதிபர் ஜோக்கோ விடோடோவின் மகனுமான ஜிப்ரான் ராக்காபூமிங் ராக்கா. - படம்: ஏஎஃப்பி

இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவின் மகனும் 2024ஆம் ஆண்டுத் தேர்தலில் துணை அதிபர் வேட்பாளருமான ஜிப்ரான் ராக்காபூமிங் ராக்கா, சிங்கப்பூரில் தமது கல்வியை முடித்து மேல்நிலைப் பட்டயமும் பட்டமும் பெற்றதாக எம்டிஐஎஸ் கல்வி நிலையம் தெரிவித்துள்ளது.

திரு ஜிப்ரான், 36, எம்டிஐஎஸ் கல்வி நிலையத்தில் பெற்ற கல்வித் தகுதி அங்கீகரிக்கப்பட்டதா என்று இணையத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். எம்டிஐஎஸ் அதற்குப் பதிலளித்தது.

திரு ஜிப்ரான், 2007 முதல் 2010ஆம் ஆண்டு வரை இங்கு முழுநேரக் கல்வி பயின்றதாக எம்டிஐஎஸ் தெரிவித்தது.

அந்தக் காலகட்டத்தில் அவர் மேல்நிலைப் பட்டயக் கல்வியை நிறைவுசெய்ததுடன் சந்தைப்படுத்துதல் துறையில் தனது பங்காளித்துவப் பல்கலைக்கழகம் வழங்கிய இளநிலைப் பட்டத்தையும் பெற்றார் என்று எம்டிஐஎஸ் குறிப்பிட்டது.

முன்னதாக, நவம்பர் 20ஆம் தேதி, அதிபர் விடோடோ செய்தியாளர்களைத் தமது அலுவலகத்திற்கு அழைத்து அவர்களிடம் திரு ஜிப்ரானின் கல்விச் சான்றிதழ்களைக் காட்டினார்.

“இந்தக் கேள்வி வியப்பளிக்கிறது. பிள்ளைகளுக்குக் கல்வி புகட்டிய என் பெற்றோரின் மன நிலையைக் குறித்து வருத்தப்படுகின்றேன்,” என்று திரு ஜிப்ரான் கூறினார்.

இணையவாசிகள் அவரது கல்வித் தகுதி குறித்தும் அவர் சிங்கப்பூரில் பயின்றாரா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பயின்றாரா என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருந்தனர்.

முன்னதாக, அவர் பிரிட்டனின் பிராட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாகத் தகவல்கள் வெளியாயின.

எம்டிஐஎஸ் கல்வி நிலையம் அந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஒரு பட்டக் கல்வியை வழங்குவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி இந்தோனீசியாவில் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில் அதிபர் வேட்பாளராக தற்போதைய தற்காப்பு அமைச்சர் பிரபோவோ சுபியாந்தோவும் துணை அதிபர் வேட்பாளராக திரு ஜிப்ரானும் களமிறங்குகின்றனர்.

குறிப்புச் சொற்கள்