சோல்: தென்கொரியாவில் முன்பின் அறிமுகமில்லாத ஒருவரை கொலை செய்து, உடற்பாகங்களை சிதைத்து வீசிய 23 வயது பெண்ணுக்கு நவம்பர் 24ஆம் தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஓர் ஆர்வத்தில் கொலை செய்ததாக அவர் கூறியுள்ளார்.
ஜங் யூ-ஜங் என்ற அந்தப் பெண் அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு அவரது இருப்பிடத்தைக் காட்டும் கருவியை அணிந்திருக்க வேண்டும் என்று புசான் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 26 வயது துணைப்பாட வகுப்பு பெண் ஆசிரியர் ஒருவரை கொலை செய்ததற்காக ஜங் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தென்கொரியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தனியார் துணைப்பாட ஆசிரியர்களுக்கான இணையத் தளத்தில் தனது மகளுக்கு ஆங்கிலப் பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்து ஒரு ஆசிரியரிடம் அவர் முன்பதிவு செய்துகொண்டார்.
ஜங்குக்கு திருமணமாகவில்லை. அவருக்கு மகளும் இல்லை. தன்னை ஒரு தாய் போல காட்டிக் கொண்டார். பின்னர் இணையத்தில் வாங்கிய பள்ளிச் சீருடையை அணிந்து ஆசிரியர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு ஆசிரியரைத் தாக்கி 110 தடவைக்கு மேல் அவர் கத்தியால் குத்தியுள்ளார்.
பின்னர் யங்சான் நகரில் ஆற்றோரப் புதரில் ஆசிரியரின் சிதைக்கப்பட்ட உடற்பகுதிகளை வீசிவிட்டார்.
ரத்தம் தோய்ந்த கைப்பெட்டியை வீசியதைக் கண்ட அவரை யங்சான் நகருக்கு அழைத்துச் சென்ற டாக்சி ஓட்டுநருக்கு சந்தேகம் ஏற்பட்டு காவல்துறையிடம் தகவல் அளித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து கைது செய்யப்பட்ட ஜங் கொலை செய்ததை ஜூன் மாதம் ஒப்புக் கொண்டார். கொலைகளைப் பற்றிய காட்சிகளையும் புத்தகங்களையும் பார்த்து, படித்து கொலை செய்ய வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டதாக அவர் விசாரணையில் கூறியுள்ளார்.
ஜங், ஆறு வயதில் தந்தையால் கைவிடப்பட்டவர். அவருக்கு ஒரு வயதானபோது தாயாரும் அவரை கைவிட்டார். இதனால் ஜங் பாட்டி வீட்டில் வளர்ந்துவந்தார்.
ஜங்கின் குடும்பப் பின்னணி அவரை ஒரு அசாதாரண பாதையில் இட்டுச் சென்றுள்ளது என்று தனது தீர்ப்பில் நீதிபதி கூறியிருந்தார்.
ஜங்கிடம் காவல்துறையினர் மனோவியல் சோதனை நடத்தினர். சோதனையில் ஒருவர் 40ல் குறைந்தது 25 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். ஆனால் சங் எவ்வளவு மதிப்பெண் எடுத்தார் என்பது தெரிவிக்கப்படவில்லை.

