மினியபொலிஸ்: அமெரிக்காவின் மினியசோட்டா மாநிலத்தின் மினியபொலிஸ் நகரில் கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பின இளைஞர் ஒருவர் காவல்துறை அதிகாரி ஒருவரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மினியபொலிஸ் காவல்நிலையத்தின் முன்னாள் அதிகாரி டெரெக் சவுவினுக்கு 21 ஆண்டுச் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது.
அரிசோனாவின் மத்திய சிறையில் சவுவின் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அங்கு கடந்த சனிக்கிழமை பிற்பகல் திடீரென அவரை சக கைதி ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார். அதனால் கடுமையாகக் காயமடைந்த சவுவின், மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கைதி ஒருவர் தாக்கப்பட்டதை அரிசோனாவின் மத்திய சிறைச்சாலை உறுதிப்படுத்தியது. இருப்பினும், தாக்கப்பட்டவர் டெரெக் சவுவின் என்பதை உறுதி செய்ய அதிகாரிகள் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் சிறைச்சாலையின் ஊழியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை. இந்தத் தாக்குதல் சம்பவம் பிற்பகல் 12.30க்கு நிகழ்ந்ததாக சிறைச்சாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் அவரது மேல்முறையீட்டு மனுவை கடந்த நவம்பர் 20ஆம் தேதி தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
2020ஆம் ஆண்டு மே மாதம், ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற அந்தக் கறுப்பின இளைஞரை காவல்துறையினர் மோசடி வழக்கு தொடர்பாக சந்தேகத்தின்பேரில் கைதுசெய்ய முற்பட்டனர். அதற்கு ஒத்துழைக்க முரண்டு பிடித்த அந்த இளைஞரை, காவலர் ஒருவர் தனது கால் முட்டியால் அவரது கழுத்தில் உதைத்துத் துன்புறுத்தும் காட்சியைக்கொண்ட காணொளி இணையத்தில் பரபரப்பாக பரவியது.
தொடர்புடைய செய்திகள்
போலிசாரால் கைதுசெய்யப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாய்ட் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
அதையடுத்து, கறுப்பின மக்களுக்கு எதிராக நடக்கும் செயல்களைக் கண்டித்து அமெரிக்காவின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. மினியபோலிஸ் காவல்நிலைய வாயிலில் தீவைக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன.
கறுப்பின இளைஞர் ஜார்ஜ் ஃப்ளாய்ட் ஒரு கடையில் சிகரெட் வாங்கும்போது போலி US$20-ஐ பயன்படுத்திய சந்தேகத்தின்பேரில் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது நடந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று அதிகாரிகளுக்கு சவுவின் உதவியதாகக் கூறப்படுகிறது. மற்ற மூன்று அதிகாரிகளுக்கும் குறைந்த அளவிலான தண்டனையே அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

