அன்வார்: முஸ்லிம் நாடாக இருந்தாலும் மற்றவர்கள் பற்றி சிந்திக்க வேண்டும்

அன்வார்: முஸ்லிம் நாடாக இருந்தாலும் மற்றவர்கள் பற்றி சிந்திக்க வேண்டும்

2 mins read
4ce6a8d0-845e-4b1e-870c-128fb187ca74
இனம், சமயம் பெயரில் குழப்பத்தை ஏற்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்று மலேசிய பிரதமர் கூறியுள்ளார். - கோப்புப் படம்: கெஅடிலான்

புத்ராஜெயா: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம், முஸ்லிம் நாடாக இருந்தாலும் மற்றவர்களை பற்றி சிந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சமய தீவிரவாதம், வறுமைக்கு எதிராக போராடப் போவதாகவும் அவர் உறுதியளித்தார்.

அவரது கெஅடிலான் கட்சியின் இரண்டு நாள் மாநாட்டில் சனிக்கிழமை அன்று அன்வார் உரையாற்றினார்.

அன்வார் ஆட்சிக் கட்டிலில் ஏறிய பிறகு முதல் முறையாக அக்கட்சியின் மாநாடு நடைபெற்றது.

மலேசியாவை ஆளும் கெஅடிலான் கட்சி மக்களுக்கு வாக்களித்தபடி சீர்திருத்தங்களை வேகமாக செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

“நாம் சீர்திருத்தங்களை மெதுவாக செய்வதாக சிலர் கூறுகின்றனர். இன்னும் சிலர் நாம் போதுமான அளவு இஸ்லாமியர்களாக இல்லை என்று சொல்கின்றனர். ஆனால் நாம் அனைவரையும் கருத்தில்கொண்டு நடுத்தரமான நடுநிலையான பாதையைப் பின்பற்ற வேண்டும் என்று நான் கூற விரும்புகிறேன். நமது நாடு முஸ்லிம் நாடு. இருந்தாலும் மற்றவர்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்,” என பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

ஒரே வருடத்தில் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது என்றார் அவர்.

அன்வார் இப்ராஹிம் மதவெறிக்கு எதிராகவும் பேசினார்.

“நாங்கள் ஆட்சியில் இருக்கும்வரை இனம், சமயத்தின் பெயரால் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த அனுமதிக்க மாட்டோம்,” என்று அவர் சூளுரைத்தார்.

புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி மற்றும் தேசிய முன்னணி, போர்னியோ ஆகியவற்றின் தலைவர்களும் பங்கேற்றனர்.

திரு அன்வார் தமது உரையில் எந்தக் கட்சியையும் குறிப்பிட்டு பேசவில்லை. ஆனால் மலாய் முஸ்லிம் எதிர்க்கட்சி கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனலுக்கு அவர் குறி வைத்துப் பேசியது தெள்ளத் தெளிவாக தெரிந்தது.

இந்த பெரிக்காத்தான் நேஷனல், இனம் மற்றும் சமயம் தொடர்பான விவகாரங்களை கிளப்பி வருவதாகக் கூறப்படுகிறது.

பிரதமர் அன்வாரின் ஒற்றுமை அரசாங்கம் மலேசியாவின் மலாய் முஸ்லிம் மக்களின் அதிக ஆதரவைப் பெறுவதற்காகக் கடுமையாகப் போராடி வருகிறது. ஆனால் சீன மற்றும் இந்திய இன வாக்காளர்களின் ஆதரவை இழக்காமல் அதைச் செய்ய அது முயற்சி செய்து வருகிறது.

நாட்டில் வறுமையை துடைத்தொழிக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வறுமையில் உள்ள மக்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு அரசாங்க மானியங்களை மாற்றியமைக்கும் திட்டமுள்ளதாகவும் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்