ஹமாஸ் விடுவித்த பிணைக் கைதிகள் இஸ்ரேல் வந்து சேர்ந்தனர்

ஹமாஸ் விடுவித்த பிணைக் கைதிகள் இஸ்ரேல் வந்து சேர்ந்தனர்

2 mins read
5b307871-cd04-4a1d-832b-0cc695ac51a1
ஹமாஸ் விடுவித்த அயர்லாந்து-இஸ்ரேலிய சிறுமி தனது தந்தையைக் கட்டிப் பிடித்து அழுகிறார். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

காஸா/ ஜெருசலம்: இஸ்ரேல்-ஹமாஸ் தற்காலிக சண்டை நிறுத்தத்தின்கீழ் ஹமாஸ் இரண்டாவது முறையாக விடுவித்த 13 இஸ்ரேலியர்களும் நான்கு தாய்லாந்து நாட்டவர்களும் நவம்பர் 26ஆம் இஸ்ரேல் வந்து சேர்ந்துள்ளனர்.

நான்கு நாள் போர் நிறுத்தத்தில் ஹமாஸ் பிடித்துவைத்துள்ள 200க்கும் மேற்பட்ட பிணைக் கைதிகளில் 50 பேரை விடுவிக்க வேண்டும். இதற்குப் பதிலாக இஸ்ரேலிய சிறைகளில் 150 கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்.

இந்த நிலையில் காஸாவுக்கு உதவிப் பொருள்கள் அனுப்புவதில் சச்சரவு நிலவுகிறது. இந்த நெருக்கடியைத் தீர்க்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எகிப்தும் கத்தாரும் சமரசப் பேச்சு நடத்தியதில் இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே சண்டை நிறுத்தம் அமலானது.

இதையடுத்து இரு தரப்பிலும் கைதிகளை விடுவிக்கும் பணி தொடங்கியது.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் பிணைக் கைதிகளை ஹமாஸ் ஒப்படைத்ததும் அவர்கள் காஸாவிலிருந்து எகிப்து தரப்பில் உள்ள ராஃபா எல்லையைக் கடந்து செல்வதை தொலைக்காட்சி படங்களில் காண முடிந்தது.

விடுவிக்கப்பட்ட 13 இஸ்ரேலியர்களில் ஆறு பேர் பெண்கள், ஏழு குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர் அடங்குவர்.

“விடுவிக்கப்பட்டவர்கள் இஸ்ரேலில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்கு அவர்கள் உறவினர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என்று இஸ்ரேலிய தற்காப்பு அமைச்சு அறிக்கை தெரிவித்தது.

இஸ்ரேல் தனது தரப்பில் இரண்டு சிறைகளிலிருந்து ஆறு பெண்கள், 33 சிறார்கள் உட்பட 39 பாலஸ்தீனர்களை விடுவித்தது என்று பாலஸ்தீன செய்தி நிறுவனமான வாஃபா கூறியது.

அவர்களில் சிலர் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதியில் ரமல்லாவில் உள்ள அல்-பிரே நகர சதுக்கத்திற்கு வந்து சேர்ந்தனர். அவர்களை வரவேற்பதற்காக அங்கு ஆயிரக்கணக்கான குடிமக்கள் காத்திருந்தனர் என்று ராய்ட்டர்ஸ் தகவல் தெரிவித்தது.

இஸ்ரேலுடன் ஒப்புக்கொள்ளப்பட்ட நான்கு நாள் சண்டை நிறுத்தத்தை ஹமாஸ் தொடரும் என்று அவ்வட்டாரத்தை அறிந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீர் தாக்குதலை நடத்தியதிலிருந்து முதல் முறையாக இந்த சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.

அந்த தாக்குதலில் இஸ்ரேலியர்கள் 1,200 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்குப் பதிலடியாக காஸா வட்டாரத்தை இஸ்ரேல் இடைவிடாமல் தாக்கியது.

இதில் ஏராளமான கட்டடங்கள் தரைமட்டமானது. இதுவரை காஸாவில் 14,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஹமாஸ் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
பாலஸ்தீனம்இஸ்ரேல்