இஸ்ரேல் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

1 mins read
5da1034d-ea8a-421e-84bc-a8ad36b8b2b0
இஸ்‌ரேலுக்குச் சொந்தமான CMA CGM சைமி கப்பல் கடந்த அக்டோபர் 22ஆம் தேதி ஸ்பெயினின் வெலன்சியா துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டது. - படம்: இணையம்

துபாய்: இந்திய பெருங்கடல் பகுதியில் ஈரானுக்குச் சொந்தமானதாக சந்தேகிக்கப்படும் ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறிய வானூர்தி வாயிலாக இஸ்ரேலுக்குச் சொந்தமான CMA CGM சைமி கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க அரசாங்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகக் கடும் சண்டை நடைபெற்று வருகிறது.

இதில் இஸ்ரேலில் 1,400 பேரும் காஸாவில் 11,000 பேருக்கு மேற்பட்டோரும் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் போர் காரணமாக மேற்கு ஆசிய வட்டாரத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்திய பெருங்கடல் பகுதியில் இஸ்ரேலைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவருக்கு சொந்தமான கொள்கலன் கப்பல் மீது சமீபத்தில் ட்ரோன் வாயிலாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க ராணுவத்தின் உயரதிகாரி ஒருவர், “மால்டா கொடியுடன் அனைத்துலக கடற்பகுதியில் கப்பல் சென்று கொண்டிருந்தபோது முக்கோண வடிவிலான குண்டுகளைச் சுமந்துச் செல்லும் ‘ஷாஹெட்-136’ ட்ரோன் வாயிலாக தாக்குதல் நடத்தப்பட்டது.

“இதில் கப்பல் சேதமடைந்தது; அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த விவகாரத்தில் நிலைமையைத் தொடர்ந்து நாங்கள் கண்காணித்து வருகிறோம்,” என்று அவர் கூறினார்.

இந்தத் தாக்குதலுக்கு பின்னால் ஈரான் இருப்பதாக நம்புவதற்கான காரணத்தை அந்த அதிகாரி விளக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்