இந்திய, சீனக் குடிமக்களுக்குவிசா இல்லா அனுமதி: மலேசியப் பிரதமர் அன்வார்

இந்திய, சீனக் குடிமக்களுக்குவிசா இல்லா அனுமதி: மலேசியப் பிரதமர் அன்வார்

2 mins read
8f50d144-fb94-4675-9b1a-1954a87dbd6f
இந்தியா, சீனா ஆகிய இரு நாட்டு குடிமக்களுக்கும் விசா இல்லா அனுமதி வழங்கப்படுவதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

புத்ராஜெயா: இந்தியா மற்றும் சீனாவிலிருந்து வரும் பயணிகள் மலேசியாவுக்குள் விசா இல்லாமல் அனுமதிக்கப்படுவர். முப்பது நாள்கள் வரை அவர்கள் மலேசியாவில் தங்கலாம்.

நாட்டின் சுற்றுலாத் துறையையும் பொருளியலையும் மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இடம்பெறுகிறது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம், அதாவது டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து இரு நாட்டவர்களுக்கும் விசா இல்லா அனுமதி நடைமுறைக்கு வருகிறது.

ஐக்கிய அரசாங்கத்தின் ஓராண்டு ஆட்சி அதிகாரத்தை குறிக்கும் வகையில் நடைபெற்ற கெஅடிலான் கட்சியின் இரண்டு நாள் மாநாட்டின் முடிவில் நவம்பர் 27ஆம் தேதி அன்று பிரதமர் அன்வார், விசாயில்லா அனுமதியை அறிவித்தார்.

“அடுத்த ஆண்டு சீனாவுடன் நமது அரசதந்திர உறவுகளின் 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறோம். இந்தச் சமயத்தில் டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து அந்நாட்டு குடிமக்களுக்கு 30 நாள் விசாவிலிருந்து விலக்கு அளிக்கப்படும். இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கும் இதே வசதி வழங்கப்படும்,” என்று திரு அன்வார் தெரிவித்தார்.

நவம்பர் 25ஆம் தேதி மலேசியர்களுக்கும் ஐந்து ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் 15 நாள் விசா இல்லாமல் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று சீனா அறிவித்திருந்தது.

இதையடுத்து மலேசியாவின் அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

மலேசியாவுக்கு சிங்கப்பூர், இந்தோனீசியாவிலிருந்து அதிகமான பயணிகள் வருகின்றனர். ஆனால் ஆசியான் நாடுகளைத் தவிர்த்து சீனாவிலிருந்து ஆகப்பெரிய குழுவாக ஏராளமான பயணிகள் மலேசியாவுக்கு வருகின்றனர்.

இந்த நிலையில் விமான நிலையங்களில் போக்குவரத்து மற்றும் இதர வசதிகளும் மேம்படுத்தப்படும் என்று திரு அன்வார் கூறியுள்ளார்.

கடந்த செப்டம்பரில் மலேசியாவின் சுற்றுலா, கலைகள், கலாசார அமைச்சர் டியோங் கிங் சிங், சீனாவின் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக விசாவிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இதே சலுகை இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கும் நீட்டிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

பிரதமராக பதவியேற்ற முதல் ஆண்டில் அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டதை திரு அன்வார் இப்ராஹிம் தமது உரையில் தற்காத்துப் பேசினார்.

சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்துடனான முதலீட்டுத் திட்டங்களை சுட்டிக்காட்டிய அவர், உள்நாட்டின் வர்த்தகம் மேம்பட வெளிநாடுகளுடன் நல்லுறவு மிக முக்கியம் என்றார்.

சிங்கப்பூருடன் மலேசியாவின் உறவு மேம்பட்டுள்ளது என்றும் அன்வார் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாவிசாஇந்தியா