தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுரங்கத்திற்குள் 41 பேர்; மலையில் செங்குத்தாக துளையிடும் பணி தொடங்கியது

2 mins read
1080ce92-aabc-4acd-957a-dd0dc3166f2c
சுரங்கத்தில் உள்ளவர்களை மீட்பதற்காக செங்குத்தாக துளையிடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: இபிஏ

உத்தராகண்ட்: உத்தராகண்டில் சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 ஊழியர்களை மீட்பதற்காக மலைக்கு மேலே இருந்து செங்குத்தாகத் துளையிடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

சுமார் 86 மீட்டர் உயரத்தில் 31 மீட்டர் தோண்டும் பணி முடிவடைந்துள்ளது.

உத்தராகண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12ஆம் தேதி ஏற்பட்ட திடீா் நிலச்சரிவைத் தொடா்ந்து சுரங்கத்திற்குள் வேலை பார்த்த 41 ஊழியர்களும் சிக்கிக் கொண்டனர்.

இதையடுத்து 60 மீட்டா் தொலைவுக்கு 80 செ.மீ. விட்டம் கொண்ட குழாயைச் செலுத்தி ஊழியர்களை மீட்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் துளையிடும் 25 டன் எடைக் கொண்ட ஆகா் இயந்திரம் நிறுவப்பட்டுள்ள கான்கிரீட் தளத்தில் விரிசல் ஏற்பட்டதால் மீட்புப் பணிகள் தொடா்வதில் சிக்கல் ஏற்பட்டது.

விரிசல் சீா்செய்யப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டன. தொடங்கிய ஒரு மணிநேரத்தில் ஆகா் இயந்திரத்தின் பிளேடுகள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டது. இதனால் கிடைமட்டமாக குழாய் செலுத்தும் மீட்புப் பணிகள் முழுவதும் முடங்கியது.

இந்த நிலையில், மலைக்கு மேலே இருந்து செங்குத்தாக 86 மீட்டருக்கு குழாயைச் செலுத்தி தொழிலாளா்களை மீட்பதற்கான மாற்றுத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துளையிடும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வேகமாக நடைபெற்று வருகின்றன. முதல் நாளில் 19 மீட்டா் ஆழத்துக்குத் துளையிடப்பட்டது. தற்போது 86 மீட்டரில் 31 மீட்டர் தோண்டும் பணி முடிவடைந்துள்ளது.

செங்குத்தாக துளையிடும் பணி இடையூறு இல்லாமல் தொடர்ந்தால் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் 41 ஊழியர்களைப் பாதுகாப்பாக வெளியே கொண்டு வருவதே எங்கள் முதல் இலக்கு என்று தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்