கோலாலம்பூர்: மலேசியப் பிரதமருக்கு சமூக ஊடகம் வழியாக மிரட்டல் விடுத்த 34 வயது ஆடவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அந்த ஆடவர் டிக்டோக் மூலமாகப் பதிவேற்றம் செய்த காணொளியில், மலேசியப் பிரதமரையும் அமைச்சரவையையும் கொல்பவருக்கு 5 மில்லியன் ரிங்கிட் (S$1.4 மில்லியன்) வெகுமதி அளிப்பதாக அறிவித்திருந்தார் என்று மலேசிய காவல்துறைத் தலைவர் ரஸாருதின் ஹுசேன் தெரிவித்தார்.
அந்த ஆடவர் நவம்பர் 28ஆம் தேதி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
“மிரட்டல் விடுத்த ஆடவர் கோத்தா பாருவில் உள்ள ஜாலான் பாடாங் தேம்பாக் வளாகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் டிசம்பர் 1ஆம் தேதி வரை, குற்றவியல் தண்டனைச் சட்டம் 507, தொடர்பு, பல்லூடகச் சட்டம் 1998ன் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்,” என்றும் திரு ரஸாருதின் கூறினார்.
இதற்கிடையே, சமூக ஊடகம் வழியாக மலேசிய மாமன்னரை இழிவுபடுத்திய 37 வயது ஆடவரையும் காவல்துறை கைது செய்துள்ளது.
கிளந்தான் மாநிலத்தின் கோத்தா பாருவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அந்த ஆடவர், எந்த ஆட்சியாளர் மீதும் மக்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு கருத்துரையைப் பதிவேற்றம் செய்திருந்தார் என்றும் காவல்துறை தலைவர் தெரிவித்தார்.
“அந்த ஆடவர் நவம்பர் 30ஆம் தேதி வரை விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தை கீழறுப்புச் சட்டம் 1948 பிரிவு 4(1), தொடர்பு, பல்லூடகச் சட்டம் 1998ன் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் நாங்கள் புலனாய்வு செய்து வருகிறோம்,” என்றும் திரு ரஸாருதின் வெளியிட்ட அறிக்கை விவரித்தது.
“இரண்டு சம்பவங்களையும் புக்கிட் அமான் குற்றவியல் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு விசாரித்து வருகிறது,” என்று கூறிய திரு ரஸாருதின், “இதன் தொடர்பில் யாரும் ஊகச் செய்திகளைப் பரப்ப வேண்டாம். அது விசாரணையைப் பாதித்து விடும்,” என்றும் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
“உணர்வுகளைத் தூண்டும் வகையிலான செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்ப வேண்டாம். அது சில சமயங்களில் சட்ட, ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி விடும் என்றும் நினைவுபடுத்த விரும்புகிறோம்,” என்று காவல்துறை தலைவர் மேலும் தெரிவித்ததாக தி ஸ்டார் வெளியிட்ட செய்தி கூறியது.

