பினாங்கில் கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் மூவர் உயிரிழப்பு

பினாங்கில் கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் மூவர் உயிரிழப்பு

2 mins read
256c4e25-3d86-4401-ab1c-240b1699cd3a
கட்டடம் இடிந்து விழுந்த இடத்தில் மீட்புப் பணியாளர்கள். - படம்: பெர்னாமா

ஜார்ஜ் டவுன்: மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் கட்டப்பட்டு வந்த கட்டடம் ஒன்று செவ்வாய்க்கிழமை இரவு 9.45 மணியளவில் இடிந்து விழுந்தது.

இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாக நம்பப்படும் ஒன்பது ஊழியர்களில் ஐவரை மீட்புப் பணியாளர்கள் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து, நால்வரைத் தேடி வருகின்றனர் என்று பினாங்கு காவல்துறைத் துணைத் தலைவர் முகம்மது யூசுஃப் ஜான் முகம்மது தெரிவித்தார்.

“ஏறக்குறைய 12 மீட்டர் நீளமும் 14 டன் எடையும் கொண்ட உத்திரம் விழுந்ததில், கட்டுமானத் தளத்தில் இருந்த 14 உத்திரங்களும் விழுந்தன,” என்றார் திரு யூசுஃப்.

“கட்டுமானத் தளத்தில் 18 ஊழியர்கள் இருந்தனர். அந்தச் சமயத்தில் அவர்களில் எவரும் தொழுகைக்காக வெளியே செல்லவில்லை.

“இச்சம்பவத்தில் இறந்த மூவரை இதுவரை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இருவர் விபத்து நிகழ்ந்த இடத்திலும் ஒருவர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.

“கடுமையாகக் காயமுற்ற மேலும் இருவர் பினாங்கு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்,” என்று திரு யூசுஃப் தெரிவித்தார்.

ஊழியர்கள் அனைவரும் பங்ளாதேஷ் நாட்டவர்கள் என்றார் அவர்.

கட்டுமானத் தளத்தில் இருந்தவர்கள், கட்டடம் இடிந்து விழுந்தபோது ஏற்பட்ட பலத்த சத்தம் குறித்து வர்ணித்தனர்.

கட்டடம் இடிந்து விழுந்த சத்தம் “பூமியை உலுக்குவதுபோல” இருந்ததாக முகம்மது இக்தியார், 38, கூறினார்.

“நடுப்பகுதியில் இருந்த பெரிய கான்கிரீட் உத்திரங்கள் இடிந்து விழுந்தன. மற்ற ஊழியர்களுடன் சேர்ந்து நான் பார்த்தபோது, உத்திரங்கள் சீட்டுக்கட்டுபோல விழுந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்,” என்றார் அவர்.

கட்டுமான உத்திரங்களில் கனத்த எடை காரணமாக மீட்புப் பணிகளை மேற்கொள்வது சிரமமாக இருந்ததாக பினாங்கு தீயணைப்பு, மீட்புத் துறைத் துணை இயக்குநர் ஸுல்ஃபஹ்மி சுதாஜி தெரிவித்தார்.

இந்தக் கட்டடத்தின் கட்டுமானம் இவ்வாண்டு இறுதிக்குள் நிறைவுபெற இருந்தது. இதுவரை பாதியளவு கட்டுமானப் பணிகள் முடிவுற்றதாக பினாங்கு தீவு நகர மன்ற மேயர் ஏ.ராஜேந்திரன் கூறினார்.

ஆனால், வேலைநிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இத்திட்டம் தாமதம் அடையும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்
கட்டடம்உயிரிழப்பு