காஸா: இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே நடைபெறும் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பிணைக் கைதிகளாக இருக்கும் ஆடவர்கள், ராணுவத்தினர் ஆகியோரை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
இதில் ஈடுபட்டுள்ள அமெரிக்க மத்திய உளவுப் பிரிவு, மொஸ்ஸாட் என்ற இஸ்ரேலிய உளவுப் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கத்தார் நாட்டுப் பிரதமரை அந்நாட்டுத் தலைநகர் தோஹாவில் சந்தித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் தெரிவிக்கிறது.
இதைத் தொடர்ந்து தற்காலிகப் போர்நிறுத்தம் புதிய நிலையை எட்டியுள்ளதாகவும் இது போர்நிறுத்தத்தை பல நாள்களுக்கு நீட்டிக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் கத்தார் சார்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் ஹமாஸ் இயக்கத்தாருடனும் தொடர்பு கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஹமாஸ் போராளி இயக்கம் தான் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த மேலும் இருவரை புதன்கிழமை விடுவித்ததை அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பார்ம்பிரீ பஹிதா நுக்காரா வரவேற்றுள்ளார்.
இஸ்ரேல், ஹமாஸ் இயக்கத்துக்கு இடையே ஏற்பட்ட போர்நிறுத்தத்தை தொடர்ந்து தற்பொழுது விடுவிக்கப்பட்டவர்களே ஆகக் கடைசியாக அந்த இயக்கம் விடுவித்த பிணைக் கைதிகள்.
“தற்பொழுது மேலும் இரண்டு தாய்லாந்து பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டு அவர்கள் டெல் அவிவ் மருத்துவமனைக்கு வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது,” என்று தாய்லாந்து நாட்டின் துணைப் பிரதமருமான திரு பார்ம்பிரீ சமூக ஊடகமான எக்ஸில் பதிவிட்டுள்ளார்.
இதுவரை 19 தாய்லாந்து பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், 13 பேர் பிணைக் கைதிகளாக உள்ளதாகவும் அந்நாடு கூறியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஹமாஸ் அக்டோபர் 7ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 39 தாய்லாந்து நாட்டவர் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே, தாய்லாந்தில் உள்ள ஒரு முஸ்லிம் தரப்பு தான் ஹமாஸ் இயக்கத்துடன் நேரடியாக பேசியதாகவும் அதனாலேயே ஹமாஸ் பிடித்து வைத்திருந்த தாய்லாந்து நாட்டு பிணைக் கைதிகள் முதலில் விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகள் பட்டியலில் இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டது.
இதுபற்றிக் கூறிய தாய்லாந்து வெளியுறவு அமைச்சு, இதில் பல தரப்புகளுக்கு தொடர்புள்ளது என்று விளக்கியது.
இஸ்ரேல்-ஹமாஸ் இயக்கத்துக்கிடையே போர் மூளும் முன் இஸ்ரேலின் வேளாண் துறையில் கிட்டத்தட்ட 30,000 தாய்லாந்து ஊழியர்கள் வேலை பார்த்து வந்தனர்.
இதுவே இஸ்ரேலில் வேலை பார்த்த மிக அதிகமான வெளிநாட்டு ஊழியர் குழு என்று கூறப்படுகிறது.
இ,ந்நிலையில், ஹமாஸ் இயக்கம் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் தாய்லாந்து நாட்டுப் பிணைக் கைதிகளில் மேலும் 17 பேர் நவம்பர் 30ஆம் தேதி விடுவிக்கப்படுவர் என்று தாய்லாந்து நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.