கடப்பிதழைத் திரும்பப்பெற்ற மலேசிய முன்னாள் பிரதமர்

1 mins read
b401ee3a-7388-4d57-a215-f0db6bfb247a
திரு முகைதீன் யாசின். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவரும் மலேசியாவின் முன்னாள் பிரதமருமான திரு முகைதீன் யாசினின் கடப்பிதழ் விடுவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகவும் குடும்பத்துடன் விடுமுறைப் பயணம் மேற்கொள்ளவும் ஏதுவாக, அவரது கடப்பிதழ் தற்காலிகமாகத் திருப்பித் தரப்பட்டுள்ளது.

மலேசிய ஊடகங்கள் நவம்பர் 29ஆம் தேதி காலை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.

முன்னதாக, பணமோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் திரு முகைதீனின் கடப்பிதழ் பறிமுதல் செய்யப்பட்டது.

அதை நிபந்தனையின்றி, நிரந்தரமாகத் திருப்பித் தரும்படி சென்ற மாதம் அவர் நீதிமன்றத்திடம் கோரியிருந்தார். அந்தக் கோரிக்கையை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2024ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி வரை மட்டும் கடப்பிதழை அவர் பயன்படுத்தலாம் என்றும் பின்னர் அதை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இதய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று அக்டோபர் மாதம் மலேசிய நீதிமன்றத்திடம் அளித்த மனுவில் திரு முகைதீன் குறிப்பிட்டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்