பாஸ் கட்சி பெண் எம்.பி. மீது ஜனநாயக செயல் கட்சி பிரமுகர்கள் வழக்கு

பாஸ் கட்சி பெண் எம்.பி. மீது ஜனநாயக செயல் கட்சி பிரமுகர்கள் வழக்கு

1 mins read
b0afff14-b154-4c48-8d35-43c46a59a314
லிம் குவான் எங் (இடது), லிம் கிட் சியாங். - படம்: ஊடகம்

ஜார்ஜ் டவுன்: சிங்கப்பூரின் முதலாம் பிரதமர் திரு லீ குவான் யூ, கம்யூனிசப் போராளி சின் பெங் ஆகியோருடன் தங்களைத் தொடர்புப்படுத்தி ஆதாரமற்ற கருத்துகளை கூறியதற்காக மலேசியாவின் ஜனநாயகச் செயல் கட்சியைச் சேர்ந்த மூன்று பிரமுகர்கள் பாஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சித்தி மஸ்தூரா முகம்மது மீது அவதூறு வழக்குத் தொடர்ந்து உள்ளனர்.

கெப்பாலா பாத்தாஸ் தொகுதி உறுப்பினரும் பாஸ் கட்சியின் மகளிர் அணித் துணைத் தலைவருமான சித்தி மஸ்தூரா, இம்மாதத் தொடக்கத்தில் இணையச் செய்தித்தளம் வாயிலாக டிக்டாக் காணொளி ஒன்றைப் பதிவேற்றி இருந்தார்.

அந்தக் காணொளியில் வெளியிடப்பட்ட கருத்துகள் தங்களது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்திவிட்டதாக ஜசெக பிரமுகர்களான லிம் கிட் சியாங், லிம் குவான் எங் மற்றும் தெரசா கோக் வழக்குத் தொடுத்துள்ளனர்.

எஸ்என் நாயர் அண்ட் பார்ட்னர்ஸ் எனும் சட்ட நிறுவனத்தின் சங்கர நாயர் மூலம் மூன்று வழக்குகளும் பினாங்கு, ஜார்ஜ் டவுனில் உள்ள உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு உள்ளதாக ஊடகங்களுக்கு புதன்கிழமையன்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று குறிப்பிட்டு உள்ளது.

இதுபோன்ற கருத்துகளை எழுத, வெளியிட மற்றும் விநியோகிக்க சித்தி மஸ்தூராவுக்குத் தடை விதிப்பதுடன் இழப்பீடும் பெற்றுத் தருமாறு உயர்நீதிமன்ற வழக்கில் அந்த மூவரும் தெரிவித்து உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்