காஸா/ ஜெருசலம்: இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே ஆறு நாள் சண்டை நிறுத்தத்தை குறைந்தது ஒரு நாள் நீட்டிக்க நவம்பர் 30ஆம் தேதி அன்று கடைசி நேர உடன்பாடு ஏற்பட்டது.
இதனால் பிணைக் கைதிகள், சிறைக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற வழி ஏற்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் புதிய உடன்பாட்டால் காஸாவில் உள்ள பொதுமக்களுக்கு தேவைான மனிதாபிமான உதவிகளும் தொடரும்.
“பிணைக்கைதிகளை விடுவிக்கும் சமரச முயற்சிகளை கருத்தில்கொண்டு தற்காலிக சண்டை நிறுத்தம் தொடரும்,” என்று இஸ்ரேலிய ராணுவம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
தற்காலிக போர்நிறுத்தம் காலாவதியாகும் சில நிமிடங்களுக்கு முன்பு இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
நவம்பர் 29 அன்று இஸ்ரேல் விடுவித்த 30 பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக 16 பிணைக்கைதிகளை விடுவித்த ஹமாஸ், ஏழாவது நாளாக போர் நிறுத்தம் தொடரும் என்று அதுவும் அறிக்கை வாயிலாகத் தெரிவித்தது.
போர் நிறுத்தத்தின் நிபந்தனைகள், மனிதாபிமான உதவிகள் ஆகியவற்றில் மாற்றமிருக்காது என்று கத்தாரின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
எகிப்து மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல்-ஹமாஸ் தரப்புகளுக்கு இடையே கத்தார் ஒரு முக்கிய சமரசப் பேச்சாளராக இருந்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்த நிலையில் வியாழக்கிழமை ஜெருசலமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஆறு பேர் காயமடைந்தனர் என்று இஸ்ரேலின் மேகன் டேவிட் அடோம் ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்தது.
இரு சந்தேக நபர்களிடமிருந்து சம்பவம் நடந்த இடத்திலேயே ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று காவல்துறை கூறியது.
புதிய உடன்படிக்கைக்கு முன்பு இஸ்ரேலும் ஹமாசும் அடுத்த கட்ட பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டதால் மீண்டும் சண்டையைத் தொடங்கப் போவதாக அறிவித்திருந்தன.
சிறிது நேரத்திற்கு முன்பு, ஒப்பந்தத்தின்படி இஸ்ரேலுக்கு விடுவிக்கப்படவிருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பட்டியல் வழங்கப்பட்டது.
இதனால் போர் நிறுத்தம் தொடரும் என்று இஸ்ரேலிய பிரதமர் அலுவலகத்தின் அறிக்கை தெரிவித்தது.
போர்நிறுத்தத்தை நீட்டித்ததற்கு ஈடாக மேலும் ஏழு பெண்கள், குழந்தைகளையும் மூன்று இதர பிணைக்கைதிகளின் உடல்களையும் பெற இஸ்ரேல் மறுத்துவிட்டதாக ஹமாஸ் முன்னதாக கூறியது.
இறந்த பிணைக் கைதிகளின் பெயரை ஹமாஸ் வெளியிடவில்லை.
ஆனால் மூன்று இஸ்ரேலிய பிணைக்கைதிகளும் இஸ்ரேலின் குண்டுவீச்சில் இறந்ததாக புதன்கிழமை அன்று ஹமாஸ் தெரிவித்தது.
மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பத்து மாதக் குழந்தையும் ஒன்று.