கோலாலம்பூர்: மலேசிய அரசாங்கம், படிப்படியாக உயரும் சம்பளமுறைக்கான முன்னோடித் திட்டத்தை 2024 ஜூனில் அமல்படுத்தத் திட்டமிடுவதாக அந்நாட்டுப் பொருளியல் அமைச்சர் ரஃபிஸி ரம்லி கூறியுள்ளார்.
கிட்டத்தட்ட 1,000 நிறுவனங்கள் அதில் ஈடுபடுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக தேக்க நிலையைச் சந்தித்துவரும் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவது தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட்டு நவம்பர் 30ஆம் தேதி அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
அரசாங்கத்தின் கொள்கை, துறைசார்ந்த தேவைகள், சமத்துவம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படும் என்றார் அமைச்சர்.
படிப்படியாக உயரும் சம்பளமுறை முழுவீச்சில் அமல்படுத்தப்படுவதற்கு முன்பாக, இந்த முன்னோடித் திட்டத்தின் தாக்கம் குறித்து மதிப்பீடு செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
படிப்படியாக உயரும் சம்பளமுறையால் சிறிய, நடுத்தர நிறுவனங்களின் ஊழியர்கள் பயனடைவர் என்று திரு ரஃபிஸி கூறினார். ஊழியர்கள் இதை வரவேற்றுள்ள நிலையில், முதலாளிகள் இதுகுறித்துச் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இந்தத் திட்டத்தில் பங்கெடுக்கும் நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஊக்கத் தொகை வழங்கும். அதனால் மத்திய அரசாங்கத்திற்கு இரண்டு பில்லியன் ரிங்கிட் (கிட்டத்தட்ட $572மில்லியன்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

