போர் மீண்டும் தொடங்கியது; பலர் பலி

காஸா: டிசம்பர் 1ஆம் தேதி இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான தற்காலிக சண்டை நிறுத்தம் முடிவுக்கு வந்ததால் காஸா வட்டாரத்தை இஸ்ரேல் தாக்கியது. ஏராளமான பாலஸ்தீனர்கள் குண்டு வீச்சுக்குத் தப்பி முகாம்களில் தஞ்சமடைய ஓடினர்.

அதேவேளை காஸாவை ஒட்டியுள்ள தெற்கு இஸ்ரேலிலும் ஏவுகணை அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது. ஹமாஸ் குண்டு வீசலாம் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை இஸ்ரேல் எடுத்திருந்தது.

காஸாவின் கிழக்குப் பகுதிகளை குறி வைத்து இஸ்ரேல் குண்டுகளை வீசியதாகவும் வானத்தை நோக்கி பெரும்புகை கிளம்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் டிசம்பர் 1ஆம் தேதி உள்ளூர் நேரப்படி காலை 7.00 மணியோடு காலாவதியானது. சண்டை நிறுத்தம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து இரு தரப்பில் இருந்தும் தகவல் இல்லை.

சண்டை நிறுத்த ஒப்பந்தம் காலாவதியான இரண்டு மணி நேரத்தில் காஸா வட்டாரத்தை போர் மேகம் சூழ்ந்தது. ஆகாயத் தாக்குதலில் குறைந்தது எட்டு வீடுகள் நாசமடைந்ததாகவும் 35 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும் 12 பேர் காயம் அடைந்ததாகவும் காஸாவில் உள்ள ஹமாஸ் அதிகாரிகள் கூறினர்.

“போரை மீண்டும் தொடங்கியதன் மூலம் நாங்கள் வலியுறுத்த விரும்புவது: போரின் இலக்குகளை அடைய இஸ்ரேலிய அரசாங்கம் உறுதியாக உள்ளது. பிணைக் கைதிகளை விடுவிப்பது, ஹமாசை அகற்றுவது, காஸா ஒருபோதும் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்க அனுமதிக்கக் கூடாது,” என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

ஹமாசும் போர்க் களத்தில் இறங்கியிருக்கிறது.

“சண்டை நிறுத்த உடன்பாட்டுக்கு முன்பு ஐம்பது நாள்களில் இஸ்ரேல் அடைய முடியாததை இனியும் அடைய முடியாது,” என்று ஹமாஸ் அரசியல் பிரிவின் உறுப்பினரான இஸ்ஸாட் அல் ரஷ்க் கூறியதாக அந்த அமைப்பின் இணையத் தளம் தெரிவித்தது.

இந்த நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பாலஸ்தீனிய குடிமக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் இஸ்ரேலிய தீவிரவாத குடியேறிகளுக்கு அடுத்த சில வாரங்களில் விசா தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் பைடன் நிர்வாகம் இஸ்ரேலிடம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு மற்றும் அவரது அமைச்சரவை உடனான சந்திப்பில் பல தனிநபர்களுக்கு எதிராக அமெரிக்கா தனது சொந்த நடவடிக்கையை எடுக்கும் என்று தெரிவித்தார்.

முன்னதாக காஸாவிலிருந்து எட்டு இஸ்ரேலியர்களை ஹமாஸ் விடுவித்தது. இஸ்ரேல் 30 பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்தது.

நவம்பர் 30ஆம் தேதி அன்று ஹமாஸ் விடுவித்த இரண்டு பெண்களை இஸ்ரேல் அடையாளம் கண்டறிந்தது.

அவர்களில் ஒருவர் 21 வயது மியா ஷெம். அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்கியபோது நடன விருந்து நிகழ்ச்சியிலிருந்து அவர் பிடித்துச் செல்லப்பட்டார். மற்றொருவர் 40 வயது அமிட் சோசானா.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அலுவலகம் வெளியிட்ட படங்களில் பிரெஞ்சு குடியுரிமையும் பெற்ற ஷெம் தனது தாயாரையும் சகோதரரையும் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தார். இஸ்ரேலில் உள்ள ஹட்ஸெரிம் ராணுவத் தளத்தில் அவர்கள் அனைவரும் சந்தித்துக் கொண்டனர்.

இதையடுத்து பாலஸ்தீனத்தின் போராளிகள் அமைப்பான ஹமாஸ் மேலும் ஆறு பிணைக்கைதிகளை விடுவித்தது. அவர்கள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் இஸ்ரேலிய ராணுவத் தளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் நான்கு பேர் 29 முதல் 41 வயது வரையிலான பெண்கள். மெக்சிகன்-இஸ்ரேலிய இரட்டைக் குடியுரிமை பெற்ற ஒருவரும் அவர்களிடையே இருந்தார் என்று அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிதாக விடுவிக்கப்பட்ட இதர இரண்டு பேர் சகோதரர், சகோதரியான பெலால் மற்றும் அய்ஷா அல்-ஸியாட்னாவுக்கு வயது முறையே 18, 17. இருவரும் இஸ்ரேலைச் சேர்ந்த பெடோவின் அரபு குடிமக்கள் என்று இஸ்ரேலியப் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

மாட்டுப் பண்ணையில் பால் கறந்துகொண்டிருந்தபோது அவர்களது குடும்பத்தில் உள்ள நான்கு பேர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

இந்த நிலையில் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 30 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டதாக இஸ்ரேல் சிறைத் துறை சேவை தெரிவித்தது.

காஸா வட்டாரத்தை ஒட்டியுள்ள தெற்கு இஸ்ரேலிலிருந்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் காஸாவிலிருந்து பாய்ச்சப்படும் ஏவுகணைகளைக் காட்டுகிறது. படம்: ஏஎஃப்பி
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!