சிட்னி: ஒன்பது ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்த பின் விடுவிக்கப்பட்ட மலேசிய முன்னாள் காவல் துறை அதிகாரி சிருல் அஸ்ஹார், கடந்த மூன்று வாரங்களாக ஆஸ்திரேடிலிய தலைநகரான கேன்பராவிலேயே வசித்து வருகிறார்.
மலேசியாவில் 28 வயது மங்கோலிய மாது ஒருவரைக் கொன்றதற்காக 2015ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட அவர், ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். அங்கு அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
இவரைப் போல் ஆஸ்திரேலியாவில் வாழும் மேலும் 140 வெளிநாட்டவர்கள், அவர்களில் சிலர் கடுங் குற்றவாளிகள், சிக்கல் மிகுந்த சட்ட சூழ்நிலை காரணமாக மீண்டும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கின் உதவியாளர்களில் ஒருவரான அப்துல் ரசாக் பகிண்டா என்பவரின் காதலி என்று கூறப்படுபவரும் மொழிபெயர்ப்பாளருமான அல்டான்டுயா என்ற மங்கோலிய மாதை 2006ஆம் ஆண்டு கொன்றதற்காக சிருலுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது இங்கு நினைவுகூரத்தக்கது.
அந்த மங்கோலிய அழகி கோலாலம்பூரில் திரு அப்துல் ரசாக்கின் வீட்டின் முன் கடத்தப்பட்டு பின்னர் கோலாலம்பூரின் புறநகர்ப் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டார். பிறகு அவருடைய உடல் ராணுவ வெடிபொருள் கொண்டு வெடிக்க வைக்கப்பட்டது.
அந்த மாது கொல்லப்பட்டபோது அவர் கருவுற்றிருந்தார் என்று கூறப்படுகிறது.