கழிவறையில் கேமரா: விமான நிறுவனத்தின் மீது வழக்கு

கழிவறையில் கேமரா: விமான நிறுவனத்தின் மீது வழக்கு

2 mins read
381bded7-e6d2-430e-a7a6-e37ce08c54aa
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் கழிவறையில் விமானப் பணியாள் ஒருவரது கைப்பேசி காணொளி பதிவுசெய்வதற்காக மறைத்துவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. - படம்: இபிஏ

வாஷிங்டன்: விமானப் பணியாள் ஒருவர் தனது கைப்பேசியை விமானத்தின் கழிவறையில் மறைத்துவைத்த சம்பவம், ‘அமெரிக்கன் ஏர்லைன்ஸ்’ விமானத்தில் நிகழ்ந்துள்ளது.

பசைப்பட்டையைக் கொண்டு அந்தப் பணியாள் தனது ஐஃபோனைக் கழிவறையில் ஒட்டியதாகவும் நார்த் கரோலினாவைச் சேர்ந்த பதின்ம வயது சிறுமி கழிவறைக்குள் சென்றதும் அந்த ஐஃபோன் காணொளி பதிவுசெய்யத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட அந்த 14 வயது சிறுமியின் பெற்றோர் விமான நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளனர்.

சம்பவம் செப்டம்பர் மாதத்தில் நடந்ததை அடுத்து மூன்று மாதங்களாக விமான நிறுவனத்தினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சிறுமியின் நலன் குறித்து கேட்டறியவில்லை என்றும் சிறுமியின் பெற்றோர் நியமித்துள்ள வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் சார்லட் நகரிலிருந்து பாஸ்டன் நகருக்கு விமானம் சென்றுகொண்டிருந்தபோது கழிவறையைச் சிறுமி பயன்படுத்த வேண்டியிருந்தது.

ஆனால், கழிவறைக்குள் சிறுமி செல்வதற்குமுன் விமானப் பணியாள் அதற்குள் சென்று ஒரு நிமிடத்திற்குப் பின் வெளியே வந்தார்.

கழிவறைத் தொட்டியின் இருக்கைப் பகுதி உடைந்துள்ளது என்றும் அது விரைவில் சரிசெய்யப்படும் என்றும் அந்தப் பணியாள் சிறுமியிடம் கூறினார்.

கழிவறையைப் பயன்படுத்திய சிறுமி பின்னர் தண்ணீர் பீய்ச்சியடிக்க முயன்றபோது மறைத்து வைக்கப்பட்டிருந்த கைப்பேசியைப் பார்த்துவிட்டார்.

அது குறித்து தன் பெற்றோரிடம் அவர் கூறியதை அடுத்து ஆடவரின் கைப்பேசியைத் தான் பார்க்க விரும்புவதாகச் சிறுமியின் தந்தை கேட்டார்.

ஆடவர் உடனே கைப்பேசித் திரையில் அவசர அவசரமாகத் தட்டிவிட்டு கைப்பேசியைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், கைப்பேசியில் சிறுமியின் படங்கள் இல்லை என்று பின்னர் கண்டறியப்பட்டது.

குறிப்புச் சொற்கள்