ஜகார்த்தா: இந்தோனீசியாவில் உயர்நிலைப் பள்ளி மாணவி பள்ளியில் தேர்வு எழுதிக்கொண்டிருந்தபோது அவருக்குக் குழந்தை பிறந்தது.
ஆசிரியர்களையும் சக மாணவர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்திய இந்தச் சம்பவம், நவம்பர் 30ஆம் தேதியன்று நிகழ்ந்தது.
மாணவிக்குக் குழந்தை பிறக்கவுள்ளதற்கான எந்த ஓர் அறிகுறியும் தென்படவில்லை என்று தேர்வை மேற்பார்வையிட்ட ஆசிரியர் முகம்மது நூர்சலித் குறிப்பிட்டார்.
தேர்வு தொடங்கி சிறிது நேரத்திலேயே சத்தமாக இருந்ததாகவும் மாணவர்கள் அமைதி காக்குமாறு தான் எச்சரிக்கை விடுத்ததாகவும் அவர் கூறினார்.
அப்போதுதான் குழந்தை அழும் சத்தம் அவர் காதுக்கு எட்டியது.
மாணவி ஒருவர் உட்கார்ந்தபடி கையில் குழந்தை ஒன்றை வைத்திருந்ததை அவர் கண்டார்.
தரையில் ரத்தம் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெண் ஆசிரியர் ஒருவரை அவர் உதவிக்கு அழைத்ததை அடுத்து மாணவியும் குழந்தையும் சமூகச் சுகாதார நிலையம் ஒன்றுக்குச் சிகிச்சை பெறுவதற்காகக் கொண்டுசெல்லப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், மாணவியின் குடும்பத்தாருக்கும் இச்செய்தி பேரதிர்ச்சியாக இருந்தது.
மாணவி எப்போதும்போல் பள்ளியில் காணப்பட்டதாகவும் உடற்பயிற்சிப் பாடத்தின்போதுகூட தவறாமல் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது.
மாணவி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குழந்தையை மாணவியின் குடும்பத்தார் வீட்டுக்குக் கொண்டுசென்றதாக அறியப்படுகிறது.