தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போரில் அப்பாவி மக்கள் பாதிப்புறக்கூடாது; இஸ்ரேலுக்கு அமெரிக்கா வலியுறுத்து

2 mins read
5dd12d8d-46e0-4810-bf96-175c00845245
டிசம்பர் 3ஆம் தேதி தெற்கு காஸாவை இரவு முழுவதும் இஸ்ரேல் தாக்கியது. இதில் பல கட்டடங்கள் இருந்த அடையாளம் தெரியாமல் சரிந்துகிடந்தன. - படம்: ஏஏஃப்பி

காஸா: ஹமாசுக்கு எதிரான போரில் பாலஸ்தீன மக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என்று இஸ்ரேலை அமெரிக்கா வலியுறுத்தியிருக்கிறது.

சண்டை நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததைத் தொடர்ந்து இஸ்ரேலும் ஹமாசும் மீண்டும் போரைத் தொடங்கியுள்ளன.

இஸ்ரேலியப் படை காஸாவை முற்றுகையிட்டு அதன்மீது சரமாரியாக குண்டுகளை வீசி வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், பாலஸ்தீன அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

துபாயில் பேசிய அவர், “இஸ்ரேலுக்கு தன்னைத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு, அதே சமயத்தில் அனைத்துலக மற்றும் மனிதாபிமான சட்டங்களை இஸ்ரேல் மதிக்க வேண்டும்,” என்றார்.

அமெரிக்க தற்காப்பு அமைச்சரான லாய்ட் ஆஸ்டினும் பொதுமக்களை பாதுகாக்கும் தார்மீகக் கடமை இஸ்ரேலுக்கு இருக்கிறது என்று கூறினார்.

உலகின் நெருக்கமான நண்பனாக இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கும் என்று உறுதியளித்த திரு ஆஸ்டின், காஸாவில் நிவாரண உதவிகளுக்கான வழிகளை விரிவுபடுத்த வேண்டும் என்று இஸ்ரேலிய அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

இஸ்ரேல், காஸாவின் தெற்கு வட்டாரங்களை இலக்கு வைத்து ராணுவத் தாக்குதலை நகர்த்தி வருவதால் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுமாறு வாஷிங்டன் அழுத்தம் கொடுத்துள்ளது.

வான்வழி குண்டு வீச்சுக்கும் பீரங்கித் தாக்குதலுக்கும் அஞ்சி தெற்கு காஸா மக்கள் இருக்க இடமில்லாமல் ஓடி ஒளிய வேண்டியுள்ளது. அவர்களுடைய இடம் சுருங்கி வருவதால் எகிப்துக்கு ஓட வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

காஸா சுகாதார அமைச்சு, டிசம்பர் 1ஆம் தேதி முடிவடைந்த போர் நிறுத்தத்திற்குப் பிறகு குறைந்தது 193 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகக் கூறியது. போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 15,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்று அது மேலும் தெரிவித்தது.

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலியத் தரப்பு கூறியது. அப்போது 200க்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாக ஹமாஸ் பிடித்துச் சென்றது.

இதற்கிடையே டிசம்பர் 2ஆம் தேதி செய்தியாளர் கூட்டத்தில் பேசிய இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, காஸா பொதுமக்களுக்கு பாதுகாப்பான வட்டாரத்தை வரையறுக்க அமெரிக்காவுடனும் அனைத்துலக அமைப்புகளுடனும் இஸ்ரேல் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

மற்றொரு நிலவரத்தில் ஹமாஸ் துணைத் தலைவர் சாலே அல்-அரோவ்ரி டிசம்பர் 2ஆம் தேதி அல் ஜசீராவுக்கு அளித்த பேட்டியில் காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படும் வரை இஸ்ரேலுடன் கைதிகள் பரிமாற்றம் இருக்காது என்று கூறியுள்ளார்.

“ஹமாசிடம் தற்போது இஸ்ரேலிய வீரர்களும் இஸ்ரேலிய ராணுவத்தில் முன்பு பணியாற்றிய ஆண்களும் பிணைக்கைதிகளாக இருக்கின்றனர். போர் நிறுத்தப்பட்டு இஸ்ரேலிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்கள் அனைவரும் விடுவிக்கப்படும் வரை பிணைக் கைதிகளை நாங்கள் விடுவிக்க மாட்டோம். அது வரை போர் தொடரட்டும். இதுதான் எங்கள் இறுதி முடிவு,” திரு அராவ்ரி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்