தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘அடுத்த ஆண்டு பயணங்கள் அதிகரிக்கும்’

2 mins read
39ba219f-b52d-44cf-ad37-171ddf86060e
அடுத்த ஆண்டில் அதிகமான பயணிகள் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. - கோப்புப் படம்: பிசினஸ் டைம்ஸ்

கொவிட்-19 காலத்தில் கட்டிப் போடப்பட்டிருந்த மக்கள் தற்போது சுதந்திரமாக பறக்க விரும்புவதால் பயணங்களுக்கான தேவை அடுத்த ஆண்டில் வலுவாக இருக்கிறது என்று ‘ஸ்கைஸ்கேனர்’ தலைமை நிர்வாக அதிகாரி ஜான் மேங்கெலார்ஸ் தெரிவித்துள்ளார்.

“இது, குறிப்பாக ஆசியாவுக்கு மிகவும் நல்லது. ஆசியா மேலும் மீட்சியடைந்து வருகிறது. அடுத்த ஆண்டில் பயணத் துறையில் 10 முதல் 15 விழுக்காடு வளர்ச்சியை எதிர்பார்க்கலாம்,” என்று சிஎன்ஏவின் ஏ‌ஷியா ஃபர்ஸ்ட் நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.

பயணத் தேடல் தளத்தின் 2024ஆம் ஆண்டுக்கான பயணப் போக்குகள் அறிக்கையின்படி, வெளிநாட்டு கலாசாரங்களை தெரிந்துகொள்ள பயணிகள் அதிக முன்னுரிமை அளிக்கின்றனர்.

அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவினம் பயணிகளின் மனதில் முதலிடம் வகிக்கிறது.

இருந்தாலும் தங்களுக்குப் பிடித்த கலைஞர்களின் நிகழ்ச்சிகளைக் காணவும் உணவுப் பிரியர்கள், சிறந்த உணவுக்கான இடங்களைத் தேடியும் பயணம் செய்கின்றனர். மேலும் பயணிகள் தங்களுடைய விடுமுறை அனுபவத்தை மதிப்பு வாய்ந்த வகையில் வைத்திருக்க விரும்புகின்றனர் என்று திரு மேங்கெலார்ஸ் கூறினார்.

விமானப் பயணச் சீட்டின் விலை அதிகமாக இருந்தாலும் இவ்வாண்டு முழுவதும் பயணத் தேவை அதிகரித்து வந்ததை பயணத் துறை நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போதைய பயணங்களின் எண்ணிக்கை, வரும் 2024ஆம் ஆண்டிலும் பயணம் தொடர்பான நிறுவனங்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

இவ்வாண்டின் 3வது காலாண்டில் விமானப் பயணத்திற்கான வலுவான தேவையைத் தொழில்துறையால் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது என்று அனைத்துலக விமானப் போக்குவரத்து சங்கம் (ஐஏடிஏ) தெரிவித்தது.

பயணிகள்-கிலோ மீட்டர் வருமான அடிப்படையில் பயணிகளின் போக்குவரத்து ஆண்டு அடிப்படையில் 30 விழுக்காடு கூடியுள்ளது.

உலக விமான நிலையங்களின் சங்கமான அனைத்துலக விமான நிலைய மன்றம்(ஏசிஐ), இவ்வாண்டு பயணத் துறையின் வளர்ச்சியால் 2024ஆம் ஆண்டிலும் உலகளாவிய பயணிகளின் போக்குவரத்தை மீட்டெடுப்பதற்கான சிறந்த பாதையில் தொழில் துறை இருக்கிறது என்று தெரிவித்தது.

இவ்வாண்டு பயணிகளின் போக்குவரத்து 9.4 பில்லியனுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அண்மைய புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இது, அடுத்த ஆண்டில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3வது காலாண்டின் போக்குவரத்துக்கு ஆசிய-பசிபிக் விமான நிறுவனங்கள் முக்கிய காரணங்களாக இருந்துள்ளன. இது, ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 75 விழுக்காடு அதிகமாகும்.

இருந்தாலும் வெளிநாட்டு சுற்றுலாவில் உள்ள சவால்கள், பொருளியல் மந்தம் காரணமாக இவ்வாண்டு இறுதியில் இவ்வட்டார பயணங்கள் கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது என்று ஏசிஐ கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்