தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸா முழுவதும் ஹமாசுக்கு எதிராக சண்டை

2 mins read
d4236972-efef-4e90-97fe-dea63374ff6e
டிசம்பர் 3ஆம் தேதி காஸா எல்லைக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியப் படைகள், ராணுவ வாகனங்கள். - படம்: ஏஎஃப்பி

காஸா: இஸ்ரேல், அதன் தரைவழித் தாக்குதலில் காஸா முழுவதும் ஹமாஸ் போராளிகளுடன் சண்டையிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

அகதிகள் நிறைந்துள்ள தெற்கு நோக்கி தமது படை திட்டமிட்டபடி நகர்ந்து வருவதாகவும் அது கூறியது.

இஸ்ரேலின் அண்மை தாக்குதலில் 12க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான ஏழு நாள் தற்காலிக போர் நிறுத்தம் டிசம்பர் 1ஆம் தேதி முடிவடைந்தது.

இந்த தற்காலிக சண்டை நிறுத்தத்தின்போது 105 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. அவர்களில் பெரும்பாலோர் இஸ்ரேல் நாட்டவர்கள். இதற்குப் பதிலாக இஸ்ரேல் 240 பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது.

காஸாவின் தெற்குப் பகுதியை இலக்காகக் கொண்ட தாக்குதலில் பொதுமக்கள் பாதிக்காதவண்ணம் வரம்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று இஸ்ரேலுக்கு அதன் நட்பு நாடான அமெரிக்கா அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில் மத்திய காஸாவில் உள்ள கான் யூனிஸ், டெயர் அல்-பாலா இடையிலான சாலையை இஸ்ரேலிய படைகள் துண்டித்துவிட்டன. இதனால் காஸா மூன்று பகுதிகளாக பிரிந்தது.

பொதுமக்களுக்காக பாதுகாப்பான வட்டாரத்தை ஒதுக்கியிருப்பதாக டிசம்பர் 4ஆம் தேதி ‘எக்ஸ்’ பதிவில் இஸ்ரேல் குறிப்பிட்டிருந்தது.

ஆனால் லெபானானைத் தளமாகக் கொண்ட ஹமாஸ் அதிகாரியான ஒசாமா ஹம்டன், அப்படியொரு பாதுகாப்பான வட்டாரம் எதுவும் இல்லை என்று கூறினார்.

இஸ்ரேலியப் போர் விமானங்களும் பீரங்கிகளும் காஸாவின் தெற்கில் உள்ள மற்றொரு நகரமான கான் யூனிஸை இலக்காகக் கொண்டு தாக்கி வருவதாகவும் ஏராளமானவர்கள் காயம் அடைந்ததால் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க முடியாமல் திணறுவதாகவும் குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இஸ்ரேலிய அரசாங்கத்தின் பேச்சாளரான ஐலன் லெவி, வாரயிறுதியில் கான் யூனிஸ் வட்டாரம் உட்பட 400க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டு ஹமாஸ் போராளிகள் கொல்லப்பட்டதாகவும் வடக்கில் பெய்ட் லாஹியாவில் அவர்களது உள்கட்டமைப்பு வசதிகள் அழிக்கப்பட்டதாகவும் கூறினார்.

காஸா தரைப்படை நடவடிக்கைகளில் ராணுவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 76ஆக அதிகரித்துள்ளது என்று டிசம்பர் 4ஆம் தேதி இஸ்ரேல் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்