தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கினபாலு மலையிலிருந்து மலையேறிகள் கனமழையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்

1 mins read
43527ab7-6cfc-4e39-82e3-12bb4ef2ac44
மலையேறும் பாதையில் வெள்ளம் வழிந்தோடிய நிலையில் அனைத்து மலையேறிகளும் மீட்கப்பட்டுள்ளனர். - படம்: த ஸ்டார் இணையம்

கோத்தா கினபாலு (சாபா): கினபாலு மலையில் சிக்கியிருந்த 49 மலையேறிகள் பத்திரமாக மீட்கப்பட்டு கீழே கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இந்த மீட்பு நடவடிக்கையில் வழிகாட்டிகளும், சுமை தூக்குபவர்களும் உதவினர் என்று ‘சாபா பூங்கா’ இயக்குநர் மெக்லரின் லகிம் கூறினார்.

டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கிய கனமழைக்கு இடையே மலையேறிகள் மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

“மலையேறிய பாதையிலிருந்து அனைத்து மலையேறிகளும் கீழே அழைத்து வரப்பட்டனர். எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை,” என்று த ஸ்டார் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.

கினபாலு மலையின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட காணொளிகள், வெள்ளம் நிறைந்த பாதைகளில் வழிகாட்டிகளின் உதவியுடன் மலையேறிகள் இறங்கி வருவதைக் காட்டியது.

மலையேறிகள் வழக்கமாக அதிகாலை 2,00 மணிக்கு 4,095 மீட்டர் உயரமுள்ள மலை மீது ஏறுவது வழக்கம். சூரிய உதயத்திற்கு முன்பு ‘லோ’ எனும் மலை உச்சியைத் தொடுவது அவர்களது இலக்கு. பின்னர் காலை 6.00 மணி அளவில் அவர்கள் மலையிலிருந்து கீழே இறங்க ஆரம்பிப்பார்கள்.

கனமழையால் மலையேறும் பாதைகளில் வெள்ளம் ஏற்படுவது இது முதல் முறையல்ல.

செப்டம்பரிலும் இதே போன்ற சம்பவம் நடைபெற்றதாக 2022 அக்டோபர் 14ஆம் தேதி வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனமழையில் மலையேறுவது ஆபத்தானது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ‘சாபா பூங்கா’ தற்காலிகமாக மலையேற தடை விதித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்