தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எரிமலையில் காணாமல்போன பத்து பேரைகண்டுபிடிக்க தீவிர முயற்சி

1 mins read
00fe4ca4-9e99-4a8f-8dc5-0a809abba6bb
மலையிலிருந்து சடலங்களை மீட்புப் பணியாளர்கள் கீழே கொண்டு வருகின்றனர். - படம்: ஏஎஃப்பி

அகாம் (இந்தோனீசியா): எரிமலை வெடித்துச் சிதறியதில் 13 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் காணாமல் போன பத்துப் பேரைக் கண்டுபிடிக்க டிசம்பர் 5ஆம் தேதி தீவிர முயற்சி எடுக்கப்பட்டது.

இந்தோனீசியாவின் நூற்றுக்கணக்கான மீட்பு ஊழியர்கள் காணாமல் போனவர்களைத் தேடி வருகின்றனர்.

சுமத்ரா தீவில் உள்ள மராபி எரிமலை டிசம்பர் 4ஆம் தேதி வெடித்தது. அதன் அடிவாரத்தில் இருந்த கிராமங்கள் சாம்பலில் மூழ்கின. அதே நாளில் 11 மலையேறிகள் உயிரிழந்தனர். மறுநாள் டிசம்பர் 5ஆம் தேதி மேலும் இருவர் மாண்டனர்.

இந்த நிலையில் எரிமலையில் சிக்கி உயிருக்குப் போராடியவர்களை மீட்புப் படையினர் மீட்டு கரை சேர்த்துள்ளனர்.

இருந்தாலும் இன்னும் பத்துப் பேரைக் காணவில்லை என்று நம்பப்படுகிறது.

“இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 13ஐ எட்டியுள்ளது. பத்து மலையேறிகள் இன்னமும் தேடப்பட்டு வருகின்றனர்,” என்று பாடாங் தேடி மீட்பு முகவையின் தலைவர் அப்துல் மாலிக் தெரிவித்தார்.

டிசம்பர் 4ஆம் தேதி மேலும் இரு சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மலையிலிருந்து மொத்தம் 13 சடலங்கள் அடையாளம் கண்டுபிடிப்பதற்காக கீழே கொண்டு வரப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

தேசிய சேவை மற்றும் மீட்பு முகவையான பசார்னாஸ் பகிர்ந்துகொண்ட படங்களில் ஆரஞ்சு நிற சட்டை அணிந்த மீட்புக் குழுவினர் உடல்களை தூக்கிக்கொண்டு மலையிலிருந்து இறங்குவதைக் காண முடிந்தது.

எரிமலை இன்னமும் குமுறுவதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்