கோலாலம்பூர்: மூவரைக் கடந்த இரண்டு மாதங்களில் கொன்ற புலிகளைப் பிடித்து அவற்றை மற்ற இடங்களுக்கு மாற்ற மலேசியா தீவிரமான முயற்சியில் இறங்கியுள்ளது என்று அதிகாரிகள் டிசம்பர் 7ஆம் தேதி கூறினர்.
புலிகளின் கொடூரமான தாக்குதல்கள் நிகழ்ந்த கிளந்தானின் குவா மூசாங் காட்டுப் பகுதியில் அவற்றைப் பொறிவைத்துப் பிடிக்க 11 கூண்டுகளும் 20 கேமராக்களும் அண்மைய வாரங்களில் வைக்கப்பட்டுள்ளன.
குவா மூசாங் பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் புலிகள் ஐந்து தாக்குதல்களை மேற்கொண்டன என்றும் அவற்றில் நால்வர் உயிரிழந்தனர் என்று கிளந்தானின் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா பிரிவின் இயக்குநர் முகம்மது ஹஃபிட் ரொஹானி, ஏஎஃப்பியிடம் தெரிவித்தார்.
2023 அக்டோபருக்கும் நவம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் மூவர் புலிகளின் தாக்குதல்களில் இறந்தனர்.
“இது குறித்து நாங்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளோம். கடந்த சில பத்தாண்டுகளில் இதுவே ஆக மோசமான புலித் தாக்குதல்கள்” என்றார் திரு ஹஃபிட்.
கிளந்தான் மாநிலக் காடுகளில் 35 புலிகள் வாழ்கின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது.