தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

யோகேஸ்வரிக்கு மலேசிய மாமன்னரின் சிறப்பு விருது

2 mins read
f3298544-cb24-4c2c-b30c-3c16788ed69b
பாதுகாவல் ஊழியர் ஆர். யோகேஸ்வரி - படம்: ஆர். யோகேஸ்வரி ஃபேஸ்புக்

ஈப்போ: பாதுகாவல் ஊழியரான ஆர். யோகேஸ்வரி கடந்த பல ஆண்டுகளாக ஈப்போவில் உள்ள பெர்மாய்சுரி பைனுன் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். தன்னைச் சுற்றியிருப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதையே அவர் தனது கடமையாகக் கொண்டுள்ளார்.

இரு பிள்ளைகளுக்குத் தாயான 44 வயது யோகேஸ்வரி, மருத்துவமனையில் மக்கள் நடமாட்டம் சுமூகமாக இருப்பதை உறுதி செய்வதுடன், சக்கர நாற்காலிகளில் வருவோர் வாகனங்களிலிருந்து பத்திரமாக இறங்குவதற்கும் ஏறுவதற்கும் உதவுவார்.

12 மணிநேரம் தொடர்ந்து வேலை செய்தாலும் நோயாளிகளின் நலன் பற்றி விசாரிப்பதிலும் அனைவரையும் இன்முகத்துடன் நடத்துவதிலும் யோகேஸ்வரி மிகுந்த அக்கறை காட்டுகிறார்.

அவரது கருணைக்கும் சுயநலமற்ற சேவைக்கும் இப்போது மிக உயர்வான அங்கீகாரம் கிடைத்துள்ளது. நோயாளிகளுக்கு யோகேஸ்வரி உதவும் காணொளிகளை மருத்துவமனையின் வருகையாளர்கள் பலர் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்தனர். அவை மிகவும் பிரபலமாகப் பகிரப்பட்டன.

2023 மார்ச் மாதத்தில் நடைபெற்ற மாநில அளவிலான மகளிர் தினக் கொண்டாட்டத்தின்போது, பேராக் மாநில முதல்வர் சாரனி முகம்மது, திருவாட்டி யோகேஸ்வரிக்கு ‘செஜாத்திரா வனிதா’ எனப்படும் மகிழ்ச்சிமிக்க மகளிர் விருதை வழங்கி கௌரவித்தார்.

இப்போது யோகேஸ்வரிக்கு அதைவிட சிறப்பான விருது கிடைக்கவிருக்கிறது. அவருக்கு ‘பிங்காட் பங்குவான் நெகாரா’ எனும் நாட்டின் சிறந்த சேவைக்கான விருதை மலேசிய மாமன்னர் டிசம்பர் 19ஆம் தேதியன்று தேசிய அரண்மனையில் வழங்கவிருக்கிறார்.

இதைக் கேள்விப்பட்ட யோகேஸ்வரி வாயடைத்துப் போனார். “இப்படிப்பட்ட ஒரு விருதை மலேசிய மாமன்னரிடமிருந்து பெறுவேன் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை,” என்றார் அவர்.

“நோயாளிகள் வரும் காரின் கதவைத் திறந்துவிடுதல், நோயாளிகளும் ஊழியர்களும் மின்தூக்கியில் ஏறுவதற்கு அதன் கதவைப் பிடித்துக்கொள்ளுதல், பதற்றமான நோயாளிகளை அமைதிப்படுத்துதல், போக்குவரத்தைச் சரளப்படுத்துதல் ஆகியவை எனது பொறுப்புகள்,” என்று தெரிவித்த யோகேஸ்வரியின் சேவையைப் பலரும் பாராட்டியிருக்கிறார்கள்.

யோகேஸ்வரியின் சேவையை மெச்சிய அவரது யுனைடெட் செக்கியூரிட்டி சர்வீசஸ் நிறுவனத்தின் மேலாளர் யுஸ்னி ஸாம் அவருக்கு ரொக்கப் பரிசையும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கி சிறப்பித்தார்.

“யோகேஸ்வரி மற்ற ஊழியர்களுக்கு ஒரு முன்னுதாரணம். அவர் ஓர் அற்புதமான பணியாளர். அவரைப் பற்றி பல பாராட்டுகள் வந்துள்ளன,” என்றார் திருவாட்டி யுஸ்னி.

குறிப்புச் சொற்கள்