ஆஸ்திரேலியாவில் ஓயாத வெப்ப அலை; அதிகரிக்கும் காட்டுத்தீ அபாயம்

1 mins read
f9e7381f-cc8c-4328-b955-44d06804f515
வெப்ப அலை குறித்து ஆஸ்திரேலியாவில் எச்சரிக்கை காக்க அறிவுறுத்தப்பட்டாலும் மக்கள் அந்த வெப்பத்தைக் கடற்கரைக்குச் செல்ல ஏற்ற சூழலாகக் கருதுகின்றனர். - படம்: இபிஏ

சிட்னி: ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதிகள் டிசம்பர் 9ஆம் தேதியன்று வெப்ப அலைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த வெப்ப அலையால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உண்டு என்பதால் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பல இடங்களில் நெருப்பு மூட்டுவதற்கு அதிகாரிகள் தடைவிதித்துள்ளனர்.

சிட்னியில் டிசம்பர் மாதம் சராசரியாகப் பதிவாகும் வெப்ப நிலையைக் காட்டிலும் 15 டிகிரி செல்சியஸ் அதிகம், அதாவது அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை உயரலாம் என்று ஆஸ்‌திரேலிய வானிலை முன்னுரைப்புகள் கூறுகின்றன.

“நாம் ஒருவரை ஒருவர் கவனித்துக்கொள்வதுடன் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யும் நேரம் இது,” என்று பிரதமர் அந்தோணி அல்பெனிஸ் குறிப்பிட்டார்.

ஆஸ்திரேலியாவில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான கோடைக்காலத்தில் ஏற்கெனவே காட்டுத்தீ ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்க, இந்த வெப்ப அலையால் அந்த அபாயம் உச்சத்தை எட்டியுள்ளது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், நியூ சவுத் வேல்சில் 71 காட்டுத்தீச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவற்றில் 21ஐ இன்னமும் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்றும் மாநிலத்தின் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

அடுத்த வாரம் வரை இந்தக் கடுமையான வெப்ப அலை நிலவரம் நீடிக்கலாம் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஒரு சிலர் இந்த வெப்ப அலையைத் தங்களுக்குச் சாதகமாகக் கருதிக் கடற்கரைக்குப் படையெடுத்துச் செல்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்