அமைச்சரவையை மாற்றினார் அன்வார்

கோலாலம்பூர்: மலேசியாவில் பெரிய அளவில் அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

நிதி, வெளியுறவு, சுகாதாரம் போன்ற முக்கியத் துறைகளில் செவ்வாய்க்கிழமையன்று புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.

பிரதமர் அன்வார் இப்ராகிமின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில் அமைச்சரவை மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொருளியல் வளர்ச்சி மெதுவடைந்து வரும் வேளையில் உறுதியளிக்கப்பட்ட சீர்திருத்தத் திட்டங்கள் எதிர்பார்த்த வேகத்தில் நடைமுறைப்படுத்தப்படாதது தொடர்பில் திரு அன்வாரின் அரசாங்கம் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

திரு அன்வார், மலேசியாவின் நிதி அமைச்சரும் ஆவார். அத்துறையின் இரண்டாம் அமைச்சராக அமீர் ஹம்ஸா அஸிஸான் நியமிக்கப்பட்டுள்ளார்.

டாக்டர் ஸுல்கிஃப்லி அகமது மீண்டும் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக டாக்டர் ஸலைஹா முஸ்தஃபா அப்பொறுப்பை வகித்து வந்தார்.

ஏற்கெனவே 2018ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை டாக்டர் ஸுல் சுகாதார அமைச்சராக இருந்தார்.

டாக்டர் ஸலைஹா, இப்போது மத்திய அரசாங்கத்துக்குக்கீழ் வரும் வட்டாரங்களுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மனிதவள அமைச்சர் பொறுப்பு திரு வி. சிவகுமாரிடமிருந்து திரு ஸ்டீவன் சிம் சீ கியோங்கிற்குச் சென்றுள்ளது. மனிதவள அமைச்சின் பல அதிகாரிகளுக்கு ஊழல் விவகாரங்களில் தொடர்பு இருந்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து திரு சிவகுமாரைப் பதவி விலகக்கோரி பலர் குரல் கொடுத்திருந்தனர்.

தற்காப்பு அமைச்சராக இருந்த முகம்மது ஹசான் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். வெளியுறவு அமைச்சராக இருந்த ஸாம்பிரி ஆப்துல் கதிர் இனி உயர்கல்வி அமைச்சராகப் பொறுப்பு வகிப்பார்.

அப்பொறுப்பை வகித்துவந்த முகம்மது காலிட் தற்காப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் அலுவலக அமைச்சராக இருந்த அர்மிஸான் முகம்மது அலி உள்நாட்டு வர்த்தக, வாழ்க்கைச் செலவின அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜூலை மாதம் திரு சலாஹுதீன் ஆயுபின் மறைவுக்குப் பிறகு அப்பொறுப்புக்கு யாரும் நியமிக்கப்படவில்லை.

சுற்றுச்சூழல், தொடர்பு ஆகிய துறைகளில் ஏற்கெனவே இருந்த அமைச்சுகளிலிருந்து இரண்டு புதிய அமைச்சுகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி எரிசக்தி உருமாற்றம், பொதுப் பயனீட்டுக்கான புதிய அமைச்சராக துணைப் பிரதமர் ஃபாடில்லா யுசோஃப் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அமைச்சு, இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல், பருவநிலை மாற்ற அமைச்சின் ஓர் அங்கமாக இருந்தது.

இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல், பருவநிலை மாற்ற அமைச்சராக இருந்த நிக் நாட்ஸ்மி இனி இயற்கை வளங்கள், நீடித்த நிலைத்தன்மை அமைச்சராகப் பொறுப்பு வகிப்பார்.

புதிய மின்னிலக்க அமைச்சராக பூச்சோங் நாடாளுமுன்ற உறுப்பினர் கோபிந் சிங் டியோ நியமிக்கப்பட்டுள்ளார். மின்னிலக்க அமைச்சு, முன்பு தொடர்பு, மின்னிலக்க அமைச்சின் ஓர் அங்கமாக இருந்தது.

திரு ஃபாமி ஃபாட்ஸில், தொடர்பு, மின்னிலக்க அமைச்சராக இருந்தார். அவர் இனி தொடர்பு அமைச்சராகப் பொறுப்பு வகிப்பார்.

தோட்ட, வர்த்தகப் பொருள்கள் (Plantation and Commodities ministry) அமைச்சராக திரு ஜொஹாரி அப்துல் கானி நியமிக்கப்பட்டுள்ளார். அப்பொறுப்பை திரு ஃபாடில்லா வகித்து வந்தார்.

அமைச்சர்களுக்கான பதவிப் பிரமாண நிகழ்வு செவ்வாய்க்கிழமையன்று கோலாலம்பூர் தேசிய அரண்மனையில் நடைபெற்றது.

(Source: https://www.straitstimes.com/asia/se-asia/malaysia-s-pm-anwar-reshuffle…)

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!