விழிப்புநிலையில் இந்தோனீசியா: மீண்டும் அதிகரிக்கும் கொவிட்-19 கிருமித்தொற்று

விழிப்புநிலையில் இந்தோனீசியா: மீண்டும் அதிகரிக்கும் கொவிட்-19 கிருமித்தொற்று

2 mins read
d3c24b5a-015a-4f82-b964-edef63aed925
சுக்கார்னோ ஹத்தா அனைத்துலக விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் உள்ள குடிநுழைவு சோதனைச் சாவடி நிலையம் அருகே உடல் வெப்பநிலையைக் கண்காணிக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜகார்த்தா: இந்தோனீசிய தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள அனைத்துலக விமான நிலையம், பாத்தாம் தீவிலுள்ள படகு முனையம் உள்ளிட்ட இடங்களில் உடல் வெப்பநிலையைக் கண்காணிக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

அண்மை நாள்களாக இந்தோனீசியா, சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பீன்ஸ் உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளில் கொவிட்-19 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜகார்த்தா தெரிவித்தது.

எல்லைகளில் இக்கருவிகளை வைப்பது மூலம் கொவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நாட்டிற்குள் வருவதைத் தவிர்க்கமுடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொவிட்-19 கிருமிப் பரவல் அதிகம் இருக்கும் பகுதிகளுக்கு பயணத் திட்டங்கள் இருந்தால் அவற்றைத் தள்ளிப்போடும்படி இந்தோனீசிய மக்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

மேலும் தடுப்பூசி போட்டுக்கொள்வது, முகக்கவசம் அணிவது போன்ற சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுமாறும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளிநாடுகள் செல்லும் இந்தோனீசிய மக்கள் அங்குள்ளவர்கள் மூலம் கொவிட்-19 கிருமியால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். அதனால் வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் தங்களுக்கு நோய்எதிர்ப்புச் சக்தி உள்ளதா என்பதை அறிந்துகொள்வது முக்கியம். நோய்த்தொற்றுடன் அவர்கள் நாடு திரும்பினால் அது மற்றவர்களுக்குப் பரவக்கூடும் என்று இந்தோனீசிய சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

சுக்கார்னோ ஹத்தா அனைத்துலக விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் உள்ள குடிநுழைவு சோதனைச் சாவடி நிலையம் அருகே உடல் வெப்பநிலையைக் கண்காணிக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.

பயணிகளின் வெப்ப நிலை அதிகமாக இருந்தால் விமானநிலைய அதிகாரிகள் கொவிட்-19 நோய்த் தொற்றுக்கான சோதனைகள் செய்வதாக கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்