தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸாவில் தற்காலிகப் போர் நிறுத்தத்துக்கு ஐநா பொதுச் சபை குரல்

2 mins read
f7bcb04e-54ef-4f6f-adad-2ab42b3ec288
கான் யூனிஸ் நகரில் இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பிறகு காணப்பட்ட இடிபாடுகள். - படம்: ராய்ட்டர்ஸ்

டெல் அவிவ்: இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே தொடரும் போரை மனிதாபிமானக் காரணங்களுக்காகத் தற்காலிகமாக நிறுத்தவேண்டும் என்று செவ்வாய்க்கிழமையன்று ஐக்கிய நாட்டுப் பொதுச் சபை குரல் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றத்தில் அந்நடவடிக்கையை அமெரிக்கா அதிகாரபூர்வமாக மறுத்ததைத் தொடர்ந்து ஐக்கிய நாட்டுப் பொதுச் சபை இவ்வாறு செய்யும் என்று கருதப்படுகிறது. 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாட்டுப் பொதுச் சபையில் தீர்மானத்தை ரத்து செய்யும் அதிகாரம் எந்த நாட்டுக்கும் கிடையாது.

பொதுச் சபை தீர்மானங்களைப் பின்பற்றி நடந்துகொள்ளவேண்டிய கட்டாயம் கிடையாது. எனினும், அவை அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதோடு, அவை காஸா பகுதியில் தொடரும் போரின் தொடர்பில் உலகளாவிய கருத்துகளைப் பிரதிபலிக்கும்.

இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 18,000ஐக் கடந்துவிட்டதாக ஹமாஸ் அமைப்பின்கீழ் உள்ள பாலஸ்தீன வட்டாரத்தின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றத்தின் 12 பிரதிநிதிகள் எகிப்திய ராஃபா எல்லைப் பகுதிக்கு நேரில் சென்ற மறுநாள் ஐக்கிய நாட்டுப் பொதுச் சபை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

ராஃபா எல்லைப் பகுதி வழியாகத்தான் போதுமான அளவில் மனிதாபிமான உதவியும் எரிசக்தியும் காஸாவைச் சென்றடைவதாகத் தெரிவிக்கப்பட்டது. அங்கு நேரில் சென்ற 12 பாதுகாப்பு மன்றப் பிரதிநிதிகளில் அமெரிக்கப் பிரதநிதிகள் இடம்பெறவில்லை.

தற்காலிகப் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேலும் அமெரிக்காவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்நடவடிக்கை ஹமாசுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் என்று அவை கருதுவது அதற்குக் காரணம்.

குறிப்புச் சொற்கள்