அமெரிக்க உளவுத்துறை: உக்ரேன் போரால் 90% ர‌ஷ்யப் படையினர் மாண்டனர் அல்லது காயமடைந்தனர்

1 mins read
61d3882b-a365-4c85-a35c-2ba932da7c60
புதன்கிழமையன்று உக்ரேன் தலைநகர் கியவில் நிகழ்ந்த தாக்குதலுக்குப் பிறகு காணப்பட்ட சேதம். - படம்: ஏஎஃப்பி

வா‌ஷிங்டன்: உக்ரேன் போரால் 315,000 ர‌ஷ்யர்கள் உயிரிழந்தனர் அல்லது காயமடைந்தனர் என்று அமெரிக்க உளவுத்துறை அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

அந்த எண்ணிக்கை, உக்ரேன்மீது படையெடுத்தபோது ர‌ஷ்யாவிடம் இருந்த கிட்டத்தட்ட 90 விழுக்காட்டுப் படையினருக்கு ஈடாகும். அமெரிக்க உளவுத்துறையுடன் நெருக்கமான தொடர்புடைய ஒருவர் செவ்வாய்க்கிழமையன்று இந்த விவரத்தை வெளியிட்டார்.

மேலும், போரில் ஏற்பட்டுள்ள இழப்பால் ர‌ஷ்ய ராணுவத்தின் நிலை 18 ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டதாகவும் அறிக்கை குறிப்பிட்டதாக அந்நபர் சொன்னார்.

இதுகுறித்து கருத்து தெரிவிக்குமாறு அமெரிக்காவின் ர‌ஷ்யத் தூதரகம், ர‌ஷ்ய தற்காப்பு அமைச்சிடம் கேட்டுக்கொண்டது. ஆனால், அமைச்சு அதற்குப் பதிலளிக்கவில்லை.

போரில் ர‌ஷ்ய தரப்பின் மரண எண்ணிக்கையை மேற்கத்திய நாடுகள் மிகைப்படுத்துவதாக ர‌ஷ்ய அதிகாரிகள் குறை கூறி வந்துள்ளனர். அதேவேளை, உக்ரேன் தரப்பில் மாண்டோரின் எண்ணக்கையை மேற்கத்திய நாடுகள் குறைத்து மதிப்பிடுவதாகவும் அவர்கள் சொல்கின்றனர்.

ராணுவ உதவி வழங்குமாறு உக்ரேனிய அதிபர் வொலொடமிர் ஸெலென்ஸ்கி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசியல் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அந்நிகழ்வின்போது அமெரிக்க உளவுத்துறைக்கு நெருக்கமான நபர் இத்தகவல்களை வெளியிட்டார்.

செவ்வாய்க்கிழமையன்று பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் திரு ஸெலென்ஸ்கிக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்