தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடப்பிதழ், பயணச்சீட்டு இல்லாமல்விமானத்தில் பறந்தவர் கைது

2 mins read
e1e72ace-f83e-43be-b529-44a2c8f306a0
நவம்பரில் விமானத்தில் பதுங்கி சென்றதாக செர்கேய் விலடிமிரோவிச் ஒச்சிகாவா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்துது. - படம்: ஏஎஃப்பி

லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவுக்கு கடவுச்சீட்டு, பயணச்சீட்டு இல்லாமல் விமானத்தில் செல்வது என்பது எளிதான காரியமல்ல. ஆனால் அதையும் ஒருவர் செய்து காட்டியுள்ளார்.

நவம்பர் 4ஆம் தேதியன்று டென்மார்க்கில் உள்ள கோப்பன்ஹேகன் விமான நிலையத்தில் பாஸ்போர்ட், பயணச்சீட்டு இல்லாமல் பாதுகாப்புச் சோதனைகளை வெற்றிகரமாக கடந்து சென்ற அவர், ஸ்கேண்டிநேவியன் விமானத்தில் ஏறி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலிஸ் நகரை அடைந்துள்ளார்.

அவரிடம் ரஷ்ய, இஸ்ரேலிய அடையாள அட்டைகள் மட்டுமே இருந்தன என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

விமானம் இறங்கிய மறுநாளான நவம்பர் 5ஆம் தேதி செர்கேய் விலடிமிரோவிச் ஒச்சிகாவா என்ற அந்த நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ரஷ்ய மொழி பேசும் அதிகாரி உதவியுடன் சட்ட அமலாக்க அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரது பயணத்தின் பின்னணி விசித்திரங்களைக் கண்டறியும் நோக்கத்தில் விசாரணை இருந்தது.

பொருளியல் மற்றும் சந்தைமயம் துறைகளில் முனைவர் பட்டம் பெற்று ரஷ்யாவில் பொருளியலராகப் பணியாற்றியதாக அவர் கூறியுள்ளார்.

“மூன்று நாளாக தூங்கவில்லை, என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. அமெரிக்காவுக்கு பயணச்சீட்டு வாங்கியிருக்கலாம். ஆனால் உறுதியாக தெரியவில்லை,” என்று மத்திய புலனாய்வுத் துறைக்கு அளித்த வாக்குமூலத்தில் அவர் கூறியுள்ளார்.

விமானத்தில் எப்படி ஏறினேன், கோப்பன்ஹேகனுக்கு எப்போது சென்றேன். அங்கு என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதெல்லாம் நினைவில் இல்லை என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

கடந்த நவம்பர் மாதம் விமானத்தில் பதுங்கி சென்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. இது தொடர்பான வழக்கு டிசம்பர் 26ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது.

கலிபோர்னியா மத்திய மாவட்டத்தின் அமெரிக்க தலைமைச் சட்ட அலுவலகத்தின் பேச்சாளரான தாம் மிரோஸெக், ஒச்சிகாவா ரஷ்ய குடிமகனாக இருக்கலாம் என்றும் அவரிடம் உள்ள ஆவணங்கள் அவரது வயது 46 என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் இறங்கியதும் அங்குள்ள குடிநுழைவுத் துறை அதிகாரிகளிடம் தம்முடைய கடப்பிதழை விமானத்தில் வைத்து விட்டதாக ஆங்கிலத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் விமானத்தில் பாஸ்போர்ட் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

அதிகாரிகள் விசாவுக்கான தரவுகளை ஆராய்ந்தபோது அவர் விசா வாங்கியதாகவோ விசாவுக்கு விண்ணப்பித்ததாகவோ தெரியவில்லை.

ஒச்சிகாவா எப்படி கடப்பிதழ், பயணச்சீட்டு இல்லாமல் விமானத்தில் ஏறினார் என்பது புரியாத புதிராகவே உள்ளது. அதிகாரிகளின் விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்