டாக்கர்: மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் 2024ஆம் ஆண்டு சாதனை அளவாக கிட்டத்தட்ட 49.5 மில்லியன் மக்கள் பட்டினியால் வாடுவார்கள் என்று ஐக்கிய நாடுகள் மன்றம் கணித்துள்ளது.
உலக நாடுகளுக்கு இடையிலான பூசல்கள், பருவநிலை மாற்றம், அதிகரிக்கும் உணவு விலைகள் ஆகியவற்றால் அந்த அவல நிலை ஏற்படலாம் என்று செவ்வாய்க்கிழமை மன்றம் தெரிவித்தது.
2023ஆம் ஆண்டில் பசி, பட்டினியால் தவிப்போரின் விகிதத்தைக் காட்டிலும் இது 4 விழுக்காடு அதிகம்.
அதிலும், கடலோர ஆப்பிரிக்க நாடுகளில் பட்டினி நிலவரம் மோசமடையக்கூடும் என்றும் ஐநா தெரிவித்து உள்ளது.
கிட்டத்தட்ட 6.2 மில்லியன் பேர் பாதிக்கப்படுவார்கள் என்றும் 2023ஆம் ஆண்டைக் காட்டிலும் அது 16 விழுக்காடு அதிகம் என்றும் தெரிய வருகிறது.
ஐநா உலக உணவுத் திட்ட அமைப்பும் இதர மனிதாபிமான உதவி அமைப்புகளும் வெளியிட்ட புதிய வட்டார உணவுப் பாதுகாப்பு பகுப்பாய்வு அறிக்கை இதனைக் குறிப்பிட்டது.
“மேற்கு, மத்திய ஆப்பிரிக்க வட்டாரத்தில் பசி, பட்டினி ஆக மோசமான நிலவரத்தில் உள்ளது.
“அதனைச் சமாளிக்கப் போதுமான நிதியளிப்பில் இன்னும் வேகம் தேவை,” என்று ஐநா உலக உணவுத் திட்ட அமைப்பின் மேற்கு ஆப்பிரிக்க வட்டாரத்துக்கான தற்காலிக இயக்குநர் திருவாட்டி மார்கோட் வண்டேர்வெல்டென் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“போதுமான நிதி இல்லாதது, பட்டினியால் இருப்போர் பற்றாக்குறை உணவும் சத்து குறைவான உணவும் உண்ண வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது,” என்றார் அவர்.
மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் மூன்றில் இரு குடும்பங்களுக்கு சத்தான உணவு கிடைக்கவில்லை என்று பகுப்பாய்வு கண்டறிந்து உள்ளது.

