துபாய்: காலத்துக்கு ஒவ்வாத எண்ணெய், நிலக்கரி, இயற்கை எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருள்களை உலகம் கைவிடவேண்டும் என்று துபாயில் புதன்கிழமை ஒன்றுகூடிய 200க்கும் மேற்பட்ட நாடுகள் அழைப்பு விடுத்து உள்ளன.
உலகம் எதிர்நோக்கும் பருவநிலை மாற்ற நெருக்கடிக்கு அத்தகைய எரிபொருளே முக்கிய பங்களிக்கிறது என்று அந்த நாடுகள் ஒரே குரலில் கூறியுள்ளன.
உலக நாடுகள் இவ்வாறு அழைப்பு விடுத்திருப்பது இதுவே முதல்முறை.
ஐக்கிய அரபு சிற்றரசுகள் தலைமைத்துவத்தில் 13 நாள்களுக்கும் மேலாக நடைபெற்ற காப்28 உச்சநிலைக் கூட்டத்தில் உலக நாடுகள் கலந்து ஆலோசித்தன.
இறுதியில் அவற்றுக்கு இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டது.
“ஒவ்வொரு நாடும் தங்களது சொந்த நலனுக்கு முன்னதாக பொது நலனில் கவனம் செலுத்துகின்றன. நீக்குப்போக்கு தன்மையை அவை வெளிப்படுத்தி உள்ளன,” என்று காப்28ன் தலைவர் சுல்தான் அல் ஜாபர் தெரிவித்தார்.
இந்தப் பிரபஞ்சத்தில் உருமாற்றத்தைக் கொண்டு வர பங்களித்தமைக்காக ஐக்கிய அரபு சிற்றரசுகள் பெருமைகொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் அவர் உரையாற்றுகையில், “இந்த உலகம் புதிய வழியைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. வடதுருவ நிகழ்வுக்குப் பின்னர் நாம் புதிய வழியைக் கண்டுபிடித்து உள்ளோம்,” என்று வெப்பநிலையை 1.5 டிகிரிக்குக் கட்டுப்படுத்தும் இலக்கைக் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக வரைவு ஒப்பந்தம் ஒன்றை அவர் வெளியிட்டார்.
எரிசக்தி முறையில் புதைபடிவ எரிபொருள்களில் இருந்து ஒழுங்கான முறையிலும் சரிசமமான அளவிலும் தள்ளி இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்தப் பத்தாண்டுகளில் நாம் இதனை வேகப்படுத்துவதன் மூலம் 2050ஆம் ஆண்டுக்குள் அத்தகைய எரிபொருளை அறவே பயன்படுத்தாத நிலையை எட்ட முடியும்,” என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
28 ஆண்டுகால பருவநிலை உச்சநிலைக் கூட்டத்தில் இப்போதுதான் முதல்முறை புதைபடிவ எரிபொருள் பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது.
“30 ஆண்டுகளில் இதுவே முதல் முறை. புதைபடிவ எரிபொருளுக்கு முடிவு கட்டுவதற்கான பணிகளை நாம் இப்போதிருந்து தொடங்கலாம்,” என்று பருவநிலை மாற்றத் திட்டத்திற்கான ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் வோப்க ஹொக்ஸ்டிரா கூறினார்.

