தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கொவிட்-19 அதிகரிப்பு; விழிப்புடன் இருக்கும்படி மலேசிய மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை

2 mins read
c14f9968-3f88-4cb9-9c07-c929fc875614
கடந்த வாரம் மலேசியாவில் பதிவான தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 12,757. இது அதற்கு முந்திய வாரத்தைக் காட்டிலும் ஏறக்குறைய இருமடங்கு. - படம்: ராய்ட்டர்ஸ்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் கொவிட்-19 தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த வாரம் கிட்டத்தட்ட இரட்டிப்பான நிலையில் மலேசியர்கள் மீண்டும் முகக்கவசம் அணியும் நிலை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

மலேசியாவில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்றபோதிலும் கிருமிப் பரவல் மிகுந்திருந்த காலகட்டத்தில் அமல்படுத்தப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை தெரிவித்து உள்ளனர்.

மக்கள் கூட்டமாக உள்ள இடங்களிலும் பொதுப் போக்குவரத்துப் பயணத்திலும் முகக்கவசம் அணியுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

குறிப்பாக, மூத்தோரே எளிதில் பாதிப்புக்கு ஆளாகக்கூடியவர்கள் என்பதால் அவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதும் மருத்துவ நிபுணர்களின் வேண்டுகோள்.

மலேசியாவில் இரு வாரங்களுக்கு முன்னர் பதிவான வாராந்தர கொவிட்-19 தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 6,796.

அது கடந்த வாரம் கிட்டத்தட்ட இரட்டிப்பாகி 12,757 ஆனதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டாக்டர் முஹம்மது ராட்ஸி அபு ஹசன் தெரிவித்து உள்ளார்.

மேலும், டிசம்பர் 3ஆம் தேதிக்கும் 9ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மலேசியாவில் 11 கொவிட்-19 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

கொவிட்-19 தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளபோதிலும் நாட்டின் ஒட்டுமொத்த கிருமிப் பரவல் நிலவரம் கட்டுக்குள் இருப்பதாக டாக்டர் முஹம்மது ராட்ஸி தெரிவித்துள்ளார்.

பதிவான தொற்றுச் சம்பவங்களில் பெரும்பாலானவை லேசான அறிகுறிகளுடன் உள்ளவை மற்றும் மருத்துவ சிகிச்சை தேவைப்படாதவை என்றார் அவர்.

“இருப்பினும், தொற்றுச் சம்பவங்களின் அதிகரிப்பு கவலையளிக்கிறது. முதியோர் மற்றும் உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா மற்றும் புற்றுநோய் உள்ளவர்கள் எளிதில் பாதிப்படக்கூடியவர்களாக இருக்கின்றனர்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் கல்வி துணை அமைச்சரான மா ஹாங் சூன், வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு குறிப்பாக சில்லறை, உணவு விநியோகிக்கும் தொழிலில் இருப்பவர்களுக்கு அண்மைய தொற்றுநோய் தடுப்பு வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அத்தகைய தொழில்புரியும் இடங்களில்தான் மக்கள் அதிகமாக கூடுவதை அவர் சுட்டிக்காட்டினார்.

.

குறிப்புச் சொற்கள்