வாஷிங்டன்: ரஷ்யப் பொருளாதாரம் உக்ரேனுடன் நடக்கும் போரினால் பாதிப்படைந்துள்ளது என்று அமெரிக்க நிதித் துறை அறிக்கை தெரிவிக்கின்றது. ரஷ்யா அதன் வரவுசெலவில் மூன்றில் ஒரு பங்கை தற்காப்புக்கென ஒதுக்கியிருப்பது, உள்நாட்டில் விலையேற்றத்தை உருவாக்கியுள்ளது. அந்தத் தொகை $100 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாகும்.
உக்ரேனில் போரைத் தொடங்காமல் இருந்திருந்தால், ரஷ்யப் பொருளியல் 5 விழுக்காடு வளர்ச்சி கண்டிருக்கும். அமெரிக்க நிதித்துறை அலுவலகத்தின் தடை உத்தரவுகளுக்கான தலைமைப் பொருளாதார அதிகாரி ரெஷல் லின்காசை மேற்கோள்காட்டி, வியாழக்கிழமை பைனான்ஷியல் டைம்ஸ் நாளிதழ் அந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா உட்பட எரிசக்தி ஏற்றுமதி செய்யும் மற்ற நாடுகளைவிட ரஷ்யாவின் ஏற்றுமதி குறைந்திருக்கிறது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
ரஷ்யப் பொருளியலின் முக்கிய தூணாகக் கருதப்படும் எண்ணெய், எரிவாயு வருவாய், இவ்வாண்டு பெரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கடந்த சில மாதங்களில் எண்ணெய் விலை ஓரளவு ரஷ்யாவுக்குச் சாதகமாக இருந்து அதன் பொருளாதாரத்தை மீட்க உதவியது. ஆயினும் மேற்கத்திய நாடுகள் ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்திற்குத் எதிராக ஏற்படுத்திய தடைகள் முன்னுரைக்கப்பட்ட அளவிற்கு எதிர்மறை விளைவுகளை அந்நாட்டுக்கு ஏற்படுத்தவில்லை.

