பணியிலிருந்தபோது கொல்லப்பட்ட செய்தியாளர் எண்ணிக்கை குறைந்தது

2 mins read
30afa773-9b58-4c8b-b38f-03939e9d5995
இவ்வாண்டின் முதல் 11 மாதங்களில் 45 செய்தியாளர்கள், பணியில் ஈடுபட்டிருந்தபோது கொல்லப்பட்டனர்.  - படம்: ஏஎஃப்பி

பாரிஸ்: மத்திய கிழக்குப் போரில் செய்தியாளர்கள் பலர் கொல்லப்பட்டபோதிலும் இவ்வாண்டில் பணியிலிருந்தபோது கொலையுண்ட செய்தியாளர்களின் எண்ணிக்கை குறைவு.

இவ்வாண்டின் முதல் 11 மாதங்களில் 45 செய்தியாளர்கள், பணியில் ஈடுபட்டிருந்தபோது கொல்லப்பட்டனர். கடந்த ஆண்டில் 61 பேர் கொல்லப்பட்டனர்.

‘எல்லையற்ற செய்தியாளர்கள்’ என்னும் ஊடக ஆலோசனைக் குழு (ஆர்எஸ்எஃப்) இந்த விவரங்களைத் தெரிவித்து உள்ளது.

அக்டோபர் 7ஆம் தேதி மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே போர் தொடங்கியதில் இருந்து 63 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டபோதிலும் இந்த ஆலோசனைக் குழு 17 மரணங்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு உள்ளது.

“காஸாவில் செய்தியாளர்கள் உயிரிழக்கும் சோகம் நடைபெற்றாலும் உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்து வருவதைக் கவனிக்கிறோம்.

“பத்து ஆண்டுக்கு முன்னர் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கையில் இருந்து தற்போது எவ்வளவோ முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.

“2012ஆம் ஆண்டிலும் 2013ஆம் ஆண்டிலும் தலா 140 செய்தியாளர்கள் கொல்லப்பட்டனர். ஈராக்கிலும் சிரியாவிலும் நடந்த போர் காரணமாக அவ்வளவு அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டன,” என்று ஆலோசனை அமைப்பின் தலைமைச் செயலாளர் கிறிஸ்டோஃபி டெலோர் தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் போர்ச் செய்திகளைத் திரட்டச் சென்றபோது கொல்லப்பட்ட 17 செய்தியாளர்களில் 13 பேர் காஸாவில் இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்பட்டனர்.

லெபனானில் மூவர் கொல்லப்பட்ட நிலையில் இஸ்ரேலில் ஒரு செய்தியாளர் ஹமாஸ் போராளிகளால் கொல்லப்பட்டார்.

இந்த மரணங்களுக்கு போர்க் குற்றங்களே காரணம் என்று அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த ஆலோசனைக் குழு நவம்பரில் புகார் அளித்து உள்ளது.

குறிப்புச் சொற்கள்