தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸாவில் ஆபத்தான நோய்கள் பரவும் அபாயம்

2 mins read
810eafab-b07d-417e-b3ed-82898f4a43d5
இஸ்ரேலியத் தாக்குதலுக்கு அஞ்சி நடுங்கி ஓடும் பாலஸ்தீனக் குழந்தைகள். - படம்: ராய்ட்டர்ஸ்

காஸா: இஸ்ரேலின் குண்டு மழையிலும் விமானத் தாக்குதலிலும் அதிர்ஷடவசமாக உயிர் பிழைத்தவர்கள், கண்ணுக்குப் புலப்படாத உயிர்க்கொல்லி நோய்களுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.

போதுமான உணவு இல்லை. தூய்மையான தண்ணீர் இல்லை. தங்குமிடம் இல்லை. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் சோர்வடைந்துள்ளனர். இந்த நிலையில் காஸா வட்டாரத்தில் தொற்றுநோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது என்று பத்து மருத்துவர்களும் மருத்துவ உதவியாளர்களும் ராய்ட்டர்சுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளனர்.

“தொற்றுநோய்ச் சூறாவளி தொடங்கியிருக்கிறது,” என்று யுனிசெஃப் அமைப்புக்கான தலைமைப் பேச்சாளர் ஜேம்ஸ் எல்டர் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 29 முதல் டிசம்பர் 10 ஆம் தேதி வரை ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே வயிற்றுப்போக்குச் சம்பவங்கள் 66 விழுக்காடு கூடி 59,895ஆகப் பதிவாகியுள்ளன. இதே காலகட்டத்தில் எஞ்சிய மக்களிடையே வயிற்றுப்போக்குச் சம்பவங்கள் 55 விழுக்காடு அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

காஸாவில் போர் காரணமாக அனைத்து கட்டமைப்புகளும் சேவைகளும் முடங்கிவிட்டதால் இந்த எண்ணிக்கை முழுமையாகக் கணக்கிடப்படவில்லை என்று அந்த ஐநா அமைப்பு கூறியது.

தெற்கு காஸாவில் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவனையின் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவின் தலைவரான டாக்டர் அகமட் அல் ஃபாரா, தனது வார்டு கடுமையான நீரிழப்புக்கு ஆளான குழந்தைகளால் நிரம்பி வழிவதாகத் தெரிவித்துள்ளார்.

சில சம்பவங்களில் குழந்தைகளின் சிறுநீரகம் செயலிழக்கிறது என்றார் அவர்.

கடுமையான வயிற்றுப்போக்கும் வழக்கத்தைவிட நான்கு மடங்கு கூடியுள்ளது என்று அவர் கூறினார்.

டிசம்பர் 1ஆம் தேதி இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான சண்டை நிறுத்த உடன்பாடு முறிந்தது. இதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் தற்காலிக முகாம்களிலும் கைவிடப்பட்ட கட்டடங்களிலும் பள்ளிக் கூடங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர். ஏராளமானோர் திறந்தவெளியில் படுத்துறங்குகின்றனர். கழிவறை, தண்ணீர், குளியல் அறை இல்லாமல் அங்கு மக்கள் தவிக்கின்றனர்.

காஸா வட்டாரத்தில் உள்ள 36 மருத்துவமனைகளில் 21 மூடப்பட்டுவிட்டன. 11 மருத்துவமனைகளில் அவற்றின் ஒரு பகுதி மட்டுமே செயல்படுவதாகக் கூறப்படுகிறது. நான்கு மருத்துவமனைகள் குறைவான அளவில் இயங்குகின்றன என்று டிசம்பர் 10ஆம் தேதி உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்