சிட்னி: ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப அலை வீசுவதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்து உள்ளது. அதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் புதர்த் தீச் சம்பவங்கள் நிகழக்கூடும் என்று அது முன்னுரைத்து உள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ், தென் ஆஸ்திரேலியா ஆகியவற்றின் பல பகுதிகளிலும் வடக்கு வட்டாரத்திலும் வெப்ப அலை விழிப்புநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை வானிலை ஆய்வு நிலையம் தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டு உள்ளது.
எல் நினோ வானிலை சூழலுக்கு இடையே புதர்த் தீ நிகழக்கூடிய இந்தப் பருவத்தில் அதற்கான அபாயத்தை சூடான வெப்பநிலை அதிகப்படுத்தி உள்ளது. காட்டுத் தீ, சூறாவளி மற்றும் வறட்சி போன்ற கடுமையான சம்பவங்களுடன் தொடர்புடையது எல் நினோ பருவநிலை.
மேற்கு ஆஸ்திரேலியாவின் தொலைதூர நகரான ஃபிட்ஸ்ராய் கிராஸிங்கில் அதிகபட்ச வெப்பநிலை 46 டிகிரி என்று சனிக்கிழமை (டிசம்பர் 16) முன்னுரைக்கப்பட்டு உள்ளது. டிசம்பர் மாதத்தில் நிலவக்கூடிய சராசரி வெப்பநிலையைக் காட்டிலும் இது ஐந்து டிகிரிக்கும் மேலானது.

