தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின்னிலக்கம், பசுமைத் துறைகளில் உறவை மேம்படுத்த சிங்கப்பூர், ஜப்பான் நாட்டம்

2 mins read
8ae21d6f-479f-467e-88b3-71ac46c2317d
ஆசியான்-ஜப்பான் 50 ஆண்டு நிறைவு உச்சநிலைக் கூட்டத்தையொட்டி சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் (இடது) ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவும் சனிக்கிழமை (டிசம்பர் 16) சந்தித்தனர். - படம்: சிங்கப்பூரின் தொடர்பு, தகவல் அமைச்சு

கடல் துறையில் மின்னிலக்கத்தையும் பசுமை நடைமுறைகளையும் மேம்படுத்துவதற்கான புதிய உடன்பாட்டின் மூலம் இருதரப்பு உறவுகள் வலுவடைவதை சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவும் வரவேற்று உள்ளனர்.

கடல்துறையில் மின்னிலக்கத்தையும் கரிமக் குறைப்பையும் சோதனை அடிப்படையில் மேற்கொள்ள சிங்கப்பூரின் கடல்துறை மற்றும் துறைமுக ஆணையம் ஜப்பானின் சுறுசுறுப்பான ஆறு துறைமுகங்களுடன் இணைந்து பணியாற்றும்.

‘பசுமை மற்றும் மின்னிலக்கக் கடல்துறை பாதை’ என்னும் புதிய உடன்பாட்டின்கீழ் அது சாத்தியமாகும்.

உடன்பாடு கையெழுத்தாகும் நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் லீ, ஜப்பானின் பல்வேறு அம்சங்களில் சிங்கப்பூர் ஒத்துழைப்பை நல்கி வருவதாக திரு கிஷிடாவிடம் தெரிவித்தார்.

இருப்பினும், மேலும் பல அம்சங்களில், குறிப்பாக மின்னிலக்கம் மற்றும் பசுமைத் துறைகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவதை தாம் விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.

ஆசியான்-ஜப்பான் 50 ஆண்டு நிறைவையொட்டி அதுதொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்க திரு லீ, சனிக்கிழமை (டிசம்பர் 16) முதல் மூன்று நாள் ஜப்பானிய வருகை மேற்கொண்டு உள்ளார்.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் உறவு நாடாக ஜப்பானை ஆசியான் கருதுவதாகக் குறிப்பிட்ட திரு லீ, இருதரப்பிலும் இன்னும் ஆழமான தோழமையையும் ஒத்துழைப்பையும் தாம் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

ஆசியான்-ஜப்பான் 50 ஆண்டு நிறைவு உச்சநிலைக் கூட்டத்தையொட்டி கடந்த செப்டம்பரில் இருதரப்பும் தங்களுக்கு இடையிலான விரிவான உத்திபூர்வ பங்காளித்துவத்தை மேம்படுத்தின.

ஜப்பானுக்கான ஆசியானின் ஒருங்கிணைப்பு நாடு என்னும் பொறுப்பை தாய்லாந்திடம் இருந்து சிங்கப்பூர் பெற இருக்கிறது. மூன்றாண்டு காலத்துக்கான அந்தப் பொறுப்பு 2024 ஜூலையில் சிங்கப்பூருக்கு மாற்றிவிடப்படும்.

சிங்கப்பூரும் ஜப்பானும் தங்களுக்கு இடையிலான இருதரப்பு உறவின் 60 ஆண்டு நிறைவை வரும் 2026ஆம் ஆண்டு கொண்டாட இருக்கின்றன.

சிங்கப்பூருடனான ஒத்துழைப்பில் ஜப்பானியப் பிரதமர் ஆவல்

சிங்கப்பூரிலும் ஆசியானின் இதர நாடுகளிலும் தனது ஒத்துழைப்பை மேம்படுத்த ஜப்பான் ஆவலுடன் இருப்பதாக பிரதமர் லீயிடம் திரு கிஷிடா தெரிவித்தார்.

மேலும், சிங்கப்பூரிலும் ஜப்பானிலும் முன்னேற்றம் காணும் தொழில்துறைகளில் ஒத்துழைப்பை வேகப்படுத்தும் தமது விருப்பத்தையும் பிரதமர் கிஷிடா வெளிப்படுத்தினார்.

விநியோகத் தொடர் மீட்சியை வலுப்படுத்துதல், மின்னிலக்கம் ஆகியவற்றுடன் ஜப்பான்-சிங்கப்பூர் பொருளியல் கலந்துரையாடல் போன்ற கட்டமைப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதும் தமது விருப்பத்தில் அடங்கும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்