பிரதமர் லீ: அமைதியைக் கட்டிக்காக்க ஜப்பானின் பங்களிப்பு தேவை

தோக்கியோ: வட்டார நாடுகளின் பாதுகாப்பு தொடர்பில் ஜப்பானால் இன்னும் நிறைய பங்களிக்க முடியும் என்றும் அமைதியையும் நிலைத்தன்மையையும் கட்டிக்காத்து மேம்படுத்த அந்நாட்டுடனான தற்காப்பு உறவை, ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் சிங்கப்பூர் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் லீ சியன் லூங், டிசம்பர் 17ஆம் தேதியன்று தெரிவித்தார்.

ஜப்பானின் சுய தற்காப்புப் படைகளின் விமானங்கள், கப்பல்கள் சிங்கப்பூர் வழியாகச் செல்வதையும் சிங்கப்பூர் துறைமுகத்தில் நங்கூரமிடுவதையும் வரவேற்பதும் இதில் அடங்கும் என்றார் அவர்.

ஜப்பானுக்கும் ஆசியானுக்கும் இடையிலான உறவுகள் அரை நூற்றாண்டை எட்டியுள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் ஜப்பான் தலைநகரம் தோக்கியோவில் சிறப்பு உச்சநிலை மாநாடு நடைபெற்றது.

தி ஒகுரா தோக்கியோ ஹோட்டலில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் லீ கலந்துகொண்டு பேசினார். ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவும் தென்கிழக்காசிய நாடுகளின் தலைவர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மியன்மார் மட்டும் இதற்கு விதிவிலக்கு. அந்நாட்டில் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தப்பட்டதால் மாநாட்டில் கலந்துகொள்ள அதற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

கடந்த 50 ஆண்டுகளில் ஜப்பானுக்கும் ஆசியானுக்கும் இடையிலான உறவு குறித்தும் வட்டார நாடுகளின் தற்போதைய நிலை குறித்தும் மாநாட்டில் கலந்துரையாடப்பட்டது.

டிசம்பர் 16ஆம் தேதியன்று நடைபெற்ற இருநாட்டு உறவு சந்திப்பின்போது, ஜப்பானுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான தற்காப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து இருநாட்டுப் பிரதமர்களும் கலந்துரையாடியதாக இருநாட்டு வெளியுறவு அமைச்சுகள் தெரிவித்தன.

இதுகுறித்து மேல்விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

சிங்கப்பூர் கடற்படையும் ஜப்பானியக் கடற்படையும் அடிக்கடி இணைந்து பயிற்சிகளில் ஈடுபடுவதுண்டு. உதாரணத்துக்கு, இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் இருநாட்டு கடற்படையினரும் தென்சீனக் கடலில் உள்ள அனைத்துலகக் கடற்பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டன.

ஆசியானும் ஜப்பானும் சட்டத்துக்கு உட்பட்டு நிலைத்தன்மையுள்ள, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய வட்டார, அனைத்துலக முறையை மேம்படுத்த வேண்டும் என்று மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்களிடம் பிரதமர் லீ கூறினார்.

ஆசியானுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான கலந்துரையாடலுக்கான ஒருங்கிணைப்பாளர் பொறுப்பைத் தற்போது தாய்லாந்து ஏற்று நடத்தி வருகிறது.

அடுத்த ஆண்டு ஜூலை மாதம் முதல் சிங்கப்பூர் அப்பொறுப்பை ஏற்கும்.

“வட்டார நாடுகளில் நிலவும் அமைதியையும் நிலைத்தன்மையையும் சீர்குலைக்க மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. எனவே, அவற்றை எதிர்கொள்ள ஜப்பானின் பங்களிப்பு அவசரமாகத் தேவைப்படுகிறது.

“சக்திவாய்ந்த நாடுகளுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் தென்சீனக் கடல், தைவான் நீரிணை, கிழக்கு சீனக் கடல் ஆகியவற்றில் மோதல்கள் வெடிக்கும் அபாயம் உள்ளது,” என்று பிரதமர் லீ தெரிவித்தார்.

உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பும் வட்டார நாடுகளின் அமைதி, நிலைத்தன்மையைப் பாதிக்கக்கூடும் என்று பிரதமர் லீ நினைவுப்படுத்தினார்.

இதுபோன்ற செயல்கள் ஐநா சட்டங்களுக்கு எதிரானவை என்றும் அவர் கூறினார்.

வடகொரியாவைப் பற்றி பேசிய திரு லீ, அந்நாடு எப்போதெல்லாம் ஏவுகணைகளைப் பாய்ச்சுகிறதோ அப்போதெல்லாம் சிங்கப்பூர் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருப்பதைச் சுட்டினார்.

கொரியத் தீபகற்பத்தை அணுவாயுதம் இல்லாத பகுதியாக்க ஜப்பான் மேற்கொண்டு வரும் முயற்சிகளை சிங்கப்பூர் ஆதரிப்பதாக பிரதமர் லீ கூறினார்.

1970களிலும் 1980களிலும் வடகொரிய உளவுத்துறையால் கடத்தப்பட்ட ஜப்பானியர்களுக்கு வடகொரியா முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று ஜப்பான் கூறி வருகிறது.

இதையும் சிங்கப்பூர் ஆதரிப்பதாக பிரதமர் லீ தெரிவித்தார்.

ஆசியான் வட்டாரக் கருத்தரங்கு, கிழக்கு ஆசிய உச்சநிலை மாநாடு, ஆசியான் தற்காப்பு அமைச்சர்களுக்கான கூட்டம் போன்ற பலதரப்பட்ட தளங்களில் ஜப்பான் முக்கிய பங்காளியாக இருந்து வருவதாக பிரதமர் லீ தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!