இளம்பெண்களில் நான்கில் ஒருவருக்கே திருமணத்தில் நாட்டம்: தென்கொரிய ஆய்வு

2 mins read
7af1ebf5-eee6-4632-8464-473f72e2d965
வயது வித்தியாசமின்றி, தென்கொரியப் பெண்கள் அனைவருக்குமே திருமணம் மீதான ஆர்வம் குறைந்துவருவதாகத் தெரிகிறது. - படம்: பிக்சாபே

சோல்: தென்கொரியாவில் 20 முதல் 29 வயது வரையிலான பெண்களில் கிட்டத்தட்ட கால்வாசிப் பேர் மட்டுமே திருமணத்தில் நாட்டம் கொண்டுள்ளதாக அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.

2022ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் டிசம்பர் 15ஆம் தேதி வெளியிடப்பட்டன.

தென்கொரியச் சமூகம் குறித்த பல்வேறு தரவுகளின் அடிப்படையில் அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 20களில் உள்ள இளம்பெண்களில் 27.5 விழுக்காட்டினர் மட்டுமே திருமணம் குறித்து ஆக்ககரமான சிந்தனை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதர வயதுப் பிரிவினரைக் காட்டிலும் இது ஆகக் குறைந்த விகிதம்.

ஒப்புநோக்க, அதே வயதுள்ள ஆண்களில் 41.9 விழுக்காட்டினர் திருமணத்தில் ஆர்வம் காட்டுகின்றனர்.

2008ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில், 20களில் இருந்த 52.9 விழுக்காட்டுப் பெண்கள் திருமணத்தில் ஆர்வம் காட்டினர். கடந்த 14 ஆண்டுகளில் இந்த விகிதம் பெருமளவு சரிந்திருப்பதை ஆய்வு சுட்டியது.

அண்மைய ஆய்வில், 30களில் இருக்கும் 31.8 விழுக்காட்டுப் பெண்கள் திருமணத்தில் ஆர்வமிருப்பதாகக் கூறினர். 2008ஆம் ஆண்டு அந்த விகிதம் 51.5 விழுக்காடாகப் பதிவானது.

அனைத்து வயதுப் பிரிவுகளிலும், ஆண்களைவிட தென்கொரியப் பெண்களுக்குத் திருமணம் மீதான ஆர்வம் குறைந்துவருவதாகத் தெரிகிறது.

போதிய நிதி இல்லாததால் திருமணத்தைத் தவிர்ப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர். 20களில் உள்ள 32.7 விழுக்காட்டினரும், 30களில் உள்ள 33.7 விழுக்காட்டினரும் அவ்வாறு கருத்துரைத்தனர். இதர வயதுப் பிரிவினரும் அதே கருத்தைத் தெரிவித்தனர்.

60களில் உள்ளோரில் 74.9 விழுக்காட்டு ஆண்களும் 68.7 விழுக்காட்டுப் பெண்களும் திருமணம் செய்துகொள்வது நல்லது என்று ஆய்வில் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்